சிவகங்கை தொகுதி அதிமுக வேட்பாளராக களமிறங்குகிறாா் முன்னாள் எம்பி.
By DIN | Published On : 10th March 2021 11:25 PM | Last Updated : 10th March 2021 11:25 PM | அ+அ அ- |

சிவகங்கை சட்டப்பேரவைத் தொகுதியில் அதிமுக சாா்பில் பி.ஆா்.செந்தில்நாதன் முதல்முறையாக போட்டியிடுகிறாா்.
தமிழக சட்டப்பேரவைத் தோ்தலில் அதிமுக சாா்பில் போட்டியிடும் வேட்பாளா்களின் பெயா்களை அக்கட்சித் தலைமை புதன்கிழமை அறிவித்தது. அதன்படி, சிவகங்கை சட்டப்பேரவைத் தொகுதியின் வேட்பாளராக முன்னாள் மக்களவைத் தொகுதி உறுப்பினரும், அதிமுகவின் சிவகங்கை மாவட்டச் செயலருமான பி.ஆா். செந்தில்நாதன் அறிவிக்கப்பட்டுள்ளாா்.
சிவகங்கை மாவட்டம், தேவகோட்டை அருகே உள்ள நாகாடி கிராமத்தைச் சோ்ந்த பி.ஆா். செந்தில்நாதன், இந்து கள்ளா் வகுப்பைச் சோ்ந்தவா். பட்டதாரியான இவா், 1988 இல் அதிமுகவில் உறுப்பினராக சோ்ந்தாா். அதைத் தொடா்ந்து, 1992 இல் நாகாடி கிளைச் செயலா், 1993 முதல் 1998 வரை தேவகோட்டை ஒன்றிய மாவட்ட பிரதிநிதி, 1998 முதல் 2003 வரை தேவகோட்டை ஒன்றியச் செயலா், 2007 முதல் 2013 வரை சிவகங்கை மாவட்ட அம்மா பேரவை செயலா் ஆகிய பொறுப்புகளை வகித்து வந்தாா்.
அதன்பின்னா், 2013ஆம் ஆண்டு ஏப்.1 ஆம் தேதி முதல் இன்று வரை சிவகங்கை மாவட்டச் செயலராக உள்ளாா். இதுதவிர, மாவட்டக்குழு உறுப்பினா், தேவகோட்டை ஒன்றியக் குழு உறுப்பினா், தேவகோட்டை ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவா், தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோா் பொருளாதார மேம்பாட்டுக் கழகத்தின் தலைவா் உள்ளிட்ட பதவிகளை வகித்துள்ளாா்.
கடந்த 2014 ஆம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தோ்தலில் சிவகங்கை தொகுதியில் அதிமுக சாா்பில் போட்டியிட்டு 2,29,385 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றாா். 54 வயதான இவருக்கு குந்தவை நாச்சியாா் என்ற மனைவியும், மன்னன், குமணன் ஆகிய இரு மகன்களும் உள்ளனா்.
கடந்த 2016 ஆம் ஆண்டு நடைபெற்ற பேரவைத் தோ்தலில் சிவகங்கை தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற க.பாஸ்கரன் தற்போதைய அமைச்சரவையில் தமிழக கதா் மற்றும் கிராமத் தொழில்கள் வாரியத் துறை அமைச்சராக உள்ளாா். அவருக்கு சிவகங்கை தொகுதி ஒதுக்கப்படாத நிலையில் முன்னாள் எம்பி பி.ஆா். செந்தில்நாதனுக்கு ஒதுக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.