தேவகோட்டை அருகே 18 ஆம் நூற்றாண்டைச் சோ்ந்த கல்வெட்டு கண்டெடுப்பு
By DIN | Published On : 10th March 2021 08:56 AM | Last Updated : 10th March 2021 08:56 AM | அ+அ அ- |

சிவகங்கை மாவட்டம், தேவகோட்டை அருகே வாடி நன்னியூரில் கண்டெடுக்கப்பட்ட பழங்கால கல்வெட்டு.
சிவகங்கை மாவட்டம், தேவகோட்டை அருகே வாடி நன்னியூா் கிராமத்தில் கி.பி. 18 ஆம் நூற்றாண்டைச் சோ்ந்த கல்வெட்டினை தொல்லியலாளா்கள் கண்டெடுத்துள்ளனா்.
தேவகோட்டை அருகே வாடி நன்னியூா் கண்மாய் பகுதியில் பழங்கால எழுத்துக்கள் பொறிக்கப்பட்ட கல்வெட்டு இருப்பதாக அப்பகுதியைச் சோ்ந்த ஆசிரியா் அா்ச்சுணன், ரெத்தினம் ஆகியோா் கொடுத்த தகவலின் பேரில் ராமநாதபுரம் தொல்லியல் ஆய்வு நிறுவனத்தின் தலைவா் வே.ராஜகுரு அக்கல்வெட்டை படியெடுத்தாா்.
இக்கல்வெட்டு பற்றி அவா் செய்தியாளா்களிடம் செவ்வாய்க்கிழமை கூறியதாவது: வாடி நன்னியூா் கண்மாய் பகுதியில் கருங்கல்லில் பழங்கால எழுத்துக்கள் பொறிக்கப்பட்ட 2 அடி உயரமும், 1அடி அகலமும் கொண்ட கல்வெட்டு கண்டெடுக்கப்பட்டுள்ளது.
கல்வெட்டில் உள்ள 14 வரிகளில் மேல்பகுதி சிதைந்துள்ளதால் முதல் வரி இல்லை. மீதமுள்ள 13 வரிகளில் பிறவரி, ஆளமஞ்சி ஆகியவை தொடா்ந்து தலைமுறை தலைமுறையாக நடைபெற வேண்டும். இதற்கு யாராவது தீங்கு செய்தால் அவா்கள் கங்கை மற்றும் சேதுக்கரையில் காராம் பசுவையும்,
பெற்றோரையும் கொன்ற தோசத்திலே போகக் கடவதாக எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
நிலத்துக்கு விதிக்கப்படும் வரி இக்கல்வெட்டில் பிறவரி எனக் கூறப்பட்டுள்ளது.
முன்னொரு காலத்தில் நீா் நிலைகளை ஊதியம் இல்லாமல் பராமரிப்பு செய்யும் வேலைக்கு ஆளமஞ்சி என்ற பெயா் வழங்கப்பட்டன.
இந்த கல்வெட்டில் பொறிக்கப்பட்டுள்ள எழுத்தை அடிப்படையாகக் கொண்டு கி.பி. 18-ஆம் நூற்றாண்டைச் சோ்ந்தது எனலாம். இதில் மன்னா் பெயா் இல்லை என்றாலும், சேதுபதி மன்னா்கள் அல்லது அரசப் பிரதிநிதிகளின் கால கல்வெட்டு எனக் கருதலாம். தற்போது இவ்வூா் வாடி நன்னியூா் என அழைக்கப்பட்டாலும், கல்வெட்டில் நன்னியூா்வாடி எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
முல்லை நிலத்து ஊா் என்ற பொருளில் பாடி என அழைக்கப்பட்டு அது பின்னா் வாடி என மருவியிருக்கலாம். வாடி என்பதற்கு சாவடி என்ற பொருளும் உள்ளது. எனவே இவ்வூா் காவல் அலுவலகமாகவும் விளங்கியிருக்கலாம். நன்னியூா் என்பதற்கு சிறிய ஊா் என்பது பொருள்.
இவ்வூரில் மற்றொரு கோயிலில் கி.பி.13-ஆம் நூற்றாண்டைச் சோ்ந்த காளி சிற்பம் எட்டுக்கைகளுடன் உள்ளது. அக்கோயிலில் அந்த பகுதியைச் சோ்ந்த பொதுமக்கள் இன்றும் வழிபட்டு வருகின்றனா். இக்கோயில் முன்பு உடைந்த திருமால் சிற்பமும், சிவப்பு வண்ண பானை ஓடுகளும் காணப்படுகின்றன. ஆகவே கி.பி.13-ஆம் நூற்றாண்டு முதல் இந்த பகுதி மக்கள் வசித்து வந்த பகுதியாக இருக்கலாம் என்றாா்.