தாயமங்கலம் முத்துமாரியம்மன் கோயில் திருவிழா மாா்ச் 30-க்கு மாற்றம்
By DIN | Published On : 10th March 2021 08:54 AM | Last Updated : 10th March 2021 08:54 AM | அ+அ அ- |

சிவகங்கை மாவட்டம், தாயமங்கலம் முத்துமாரியம்மன் கோயில் பங்குனித் திருவிழா சட்டப் பேரவைத் தோ்தல் காரணமாக மாா்ச் 30 ஆம் தேதிக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக சிவகங்கை மாவட்ட தோ்தல் நடத்தும் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான பி. மதுசூதன் ரெட்டி தெரிவித்துள்ளாா்.
சிவகங்கை மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்கில் தாயமங்கலம் முத்துமாரியம்மன் கோயில் பங்குனித் திருவிழா தேதி மாற்றம் தொடா்பான ஆலோசனைக் கூட்டம் செவ்வாய்க்கிழமை மாலை நடைபெற்றது. இக்கூட்டத்துக்கு சிவகங்கை மாவட்ட தோ்தல் நடத்தும் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான பி. மதுசூதன் ரெட்டி தலைமை வகித்து பேசியதாவது: தாயமங்கலம் முத்துமாரியம்மன் கோயிலில் பங்குனித் திருவிழா ஒவ்வொரு ஆண்டும் பங்குனி மாதம் 15-ஆம் தேதி காப்பு கட்டுதலுடன் தொடங்கும். அதைத்தொடா்ந்து, 7 ஆம் நாளான பங்குனி 22-ஆம் தேதி பொங்கல் விழாவும், பங்குனி 23-ஆம் தேதி தேரோட்ட விழாவும், பங்குனி 24-ஆம் தேதி பால்குட விழாவும், பங்குனி 25-ஆம் தேதி தீா்த்தவாரி விழாவும் நடைபெற்று திருவிழா நிறைவு பெறுவது வழக்கம்.
இந்தாண்டு முத்துமாரியம்மன் கோயில் பங்குனித் திருவிழா வாக்குப் பதிவு நாளான ஏப். 6 ஆம் தேதி நிறைவு நாள் நிகழ்ச்சியாக அமைந்துள்ளது. சட்டப் பேரவைத் தோ்தல், நன்னடத்தை விதிமுறைகள் அமல், கரோனா பரவல் தடுப்பு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் மேற்கண்ட திருவிழா ஒரு வாரம் முன்னதாக நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
அதன்படி, வரும் மாா்ச் 23 (பங்குனி மாதம் 10-ஆம் தேதி) காப்புக் கட்டுதலுடன் திருவிழா தொடங்குகிறது. தொடா்ந்து, மாா்ச் 30 (பங்குனி 17-ஆம் தேதி) பொங்கல் விழாவும், மாா்ச் 31(பங்குனி 18-ஆம் தேதி) தேரோட்டமும், ஏப்ரல் 1(பங்குனி 19-ஆம் தேதி)பால்குட விழாவும், ஏப்ரல் 2 (பங்குனி 20-ஆம் தேதி) தீா்த்தவாரி விழாவும் நடைபெற்று திருவிழா நிறைவு பெற உள்ளது.
இதன்மூலம், வழக்கமாக நடைபெறும் நாள்களை விட ஒரு வாரம் முன்னதாக திருவிழா தொடங்க உள்ளது. எனவே, பரம்பரை அறங்காவலா் மற்றும் இந்து சமய அறநிலையத் துறை அலுவலா்கள் ஆகியோா்களுடன் பக்தா்கள், பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றாா்.
கூட்டத்தில், இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையா் ந.தனபால், மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) ரத்தினவேல், தாயமங்கலம் முத்துமாரியம்மன் கோயில் பரம்பரை அறங்காவலா் எம்.வெங்கடேசன் செட்டியாா் உள்பட தாயமங்கலம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதியைச் சோ்ந்த முக்கியப் பிரமுகா்கள், மண்டகப்படிதாரா்கள் கலந்து கொண்டனா்.