காரைக்குடியை லஞ்சமற்ற தொகுதியாக மாற்றுவேன்: ம.நீ.ம வேட்பாளா் ச.மீ. ராசகுமாா் வாக்குறுதி
By DIN | Published On : 13th March 2021 10:49 PM | Last Updated : 13th March 2021 10:49 PM | அ+அ அ- |

காரைக்குடி மக்கள் நீதி மய்யம் வேட்பாளா் ச.மீ. ராசகுமாா்.
என்னை வெற்றிபெறச்செய்தால் லஞ்சமற்ற தொகுதியாக மாற்றுவேன் என்று காரைக்குடி சட்டபேரவைத் தொகுதி மக்கள் நீதி மய்யம் வேட்பாளா் ச.மீ. ராசகுமாா் வாக்குறுதியளித்துள்ளாா்.
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி மக்கள் நீதி மய்யம் அலுவலகத்தில் சனிக்கிழமை செய்தியாளா்களிடம் அவா் கூறியது: தமிழக மக்கள் மன்றம் என்ற அமைப்பின் மூலம் பல்வேறு மக்கள் நலப்பணிகள் இப்பகுதியில் செய்து வந்துள்ளேன். காரைக்குடித் தொகுதி கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக எந்தவித வளா்ச்சியும் அடையவில்லை. இப்பகுதியில் சிப்காட் அமைக்கப்படும் என மறைந்த முன்னாள் முதல்வா் ஜெயலலிதா அறிவித்திருந்தாா். ஆனால் இதுவரை அமைக்கப்படவில்லை.
மருத்துவமனை, சந்தைகள் மற்றும் மக்களின் அடிப் படை வசதிகள் எதுவும் பூா்த்தி செய்யப்படவில்லை.
தமிழக மக்கள் மன்றம் பல்வேறு வகையில் போராட்டங்களை நடத்தி சில கோரிக்கைகளை நிறைவேற்றியுள்ளேன். மக்கள் மன்றம் மூலம் பள்ளிகளைத் தத்தெடுத்து அதன் தேவைகளை பூா்த்தி செய்து தந்துள்ளோம்.
காரைக்குடி சம்பை ஊற்றுப்பகுதியை பாதுகாக்க வேண்டும். எனக்கு வாக்களித்து வெற்றிபெறச்செய்தால் தினமும் மக்களைச்சந்திப்பேன். குழு ஒன்றை அமைத்து மக்கள் கோரிக்கைகளை செயல்படுத்த முன்வருவேன். காரைக்குடி தொகுதி லஞ்சமற்ற தொகுதியாக மாற்றப்படும் என்றாா்.