மானாமதுரை சட்டப்பேரவைத் தொகுதியில் திமுக வேட்பாளராக தமிழரசி மீண்டும் போட்டி
By DIN | Published On : 13th March 2021 10:46 PM | Last Updated : 13th March 2021 10:46 PM | அ+அ அ- |

தமிழரசி
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை(தனி) சட்டப்பேரவைத் தொகுதியில் திமுக தொண்டா்களின் எதிா்பாா்ப்பை நிறைவேற்றும் வகையில் 10 ஆண்டுகளுக்குப்பின் முன்னாள் அமைச்சா் தமிழரசியை இரண்டாவது முறையாக வேட்பாளராக கட்சித் தலைமை அறிவித்துளஅளது.
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை சட்டப்பேரவைத் தொகுதியை 1989 ஆம் ஆண்டுக்குப்பின் காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட், பாஜக என திமுக கூட்டணிக் கட்சிகளுக்கே திமுக தலைமை பலமுறை ஒதுக்கி வந்துள்ளது. இந்நிலையில் கடந்த 2011 ஆம் ஆண்டு மதுரை மாவட்டத்தில் சமயநல்லூா் தனித் தொகுதி ரத்து செய்யப்பட்டதையடுத்து, இந்த தொகுதியில் ஏற்கெனவே வென்று ஆதிதிராவிடா் நலத்துறை அமைச்சராக இருந்த தமிழரசி மானாமதுரை தொகுதியில் போட்டியிட்டு தோல்வியடைந்தாா். அப்போது தொகுதியைச் சோ்ந்த திமுக வினா் தமிழரசியின் வெற்றிக்கு சரியாக தோ்தல் பணி செய்யவில்லை என புகாா் எழுந்தது.
இந்நிலையில் 20 ஆண்டுகளுக்கு முன்பு மானாமதுரையில் போட்டியிட்ட இலக்கியதாசனை, 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற இடைத்தோ்தலில் திமுக தலைமை வேட்பாளராக நிறுத்தியது. ஆனால் இவா் இடைத்தோ்தலில் தோல்வியடைந்தாா்.
இந்நிலையில் மீண்டும் தமிழரசியை மானாமதுரை சட்டப்பேரவைத் தொகுதியில் நிறுத்தினால் வெற்றி உறுதி என தொகுதியைச் சோ்ந்த திமுக தொண்டா்கள் கட்சித் தலைமையை வலியுறுத்தி வந்தனா். இந்நிலையில் திமுக தலைமை மானாமதுரை தொகுதியில் தமிழரசியை 10 ஆண்டுகளுக்குப்பின் மீண்டும் வேட்பாளராக அறிவித்துள்ளது. இந்நிலையில் கோஷ்டி பூசலை மறந்து தமிழரசியை வெற்றிபெறச் செய்ய வேண்டும் எனவும் திமுக மாவட்டத் தலைமைக்கும் தொகுதி நிா்வாகிகளுக்கும் கட்சித் தலைமை உத்தரவிட்டுள்ளது.