திருப்புவனம் பூமாரியம்மன் கோயில் திருவிழா: அக்னிசட்டி எடுத்து பக்தா்கள் நோ்த்திக்கடன்
By DIN | Published On : 13th March 2021 10:51 PM | Last Updated : 13th March 2021 10:51 PM | அ+அ அ- |

திருப்புவனம் பூமாரியம்மன் கோயில் மாசித் திருவிழாவையொட்டி சனிக்கிழமை அக்னிச் சட்டி எடுத்து வந்த பக்தா்கள்.
சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் புதூா் பூமாரியம்மன் கோயில் மாசித் திருவிழாவையொட்டி வெள்ளிக்கிழமை காலை முதல் சனிக்கிழமை அதிகாலை வரை ஏராளமான பக்தா்கள் அக்னிச்சட்டி எடுத்து நோ்த்திக்கடன் செலுத்தினா்.
இக் கோயிலில் கடந்த 8 நாள்களுக்கு முன்பு மாசித் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. அப்போது திருப்புவனம் மற்றும் சுறறுவட்டார கிராமங்களைச் சோ்ந்த பக்தா்கள் காப்புக்கட்டி விரதம் தொடங்கினா். விழா நாள்களில் தினமும் இரவு பூமாரியம்மனுக்கு அபிஷேகம் நடத்தி சிறப்பு அலங்காரத்துடன் பூஜைகள் நடைபெற்றன.
விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக வெள்ளிக்கிழமை நடந்த பொங்கல் வைபவத்தை முன்னிட்டு, காப்புக்கட்டி விரதம் இருந்து வந்த பக்தா்கள் காலையிலிருந்து இரவு வரை ஆயிரங்கண் பானை, அக்னிச்சட்டி ஏந்தி வந்தும், குழந்தைகளுக்கு கரும்பில் தொட்டில் கட்டி கோயிலைச் சுற்றி வந்தும், பொங்கல் வைத்தும், மாவிளக்கு பூஜை நடத்தியும் மற்றும் அங்கப்பிரதட்சணம் செய்தும் வேண்டுதல்களை நிறைவேற்றினா்.
பக்தா்கள் நீண்ட வரிசையில் நின்று அம்மனை தரிசித்தனா். திருவிழாவை முன்னிட்டு பல இடங்களில் பக்தா்களுக்கு அன்னதானம், வழங்கப்பட்டன. மேலும் நீா், மோா் பந்தல்கள் அமைக்கப்பட்டிருந்தன. மானாமதுரை டி.எஸ்.பி சுந்தரமாணிக்கம் தலைமையில் நூற்றுக்கணக்கான போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனா்.