கொந்தகை அகழாய்வில் 2,500 ஆண்டுகளுக்கு முந்தைய மூடியுடன் கூடிய முதுமக்கள் தாழி கண்டெடுப்பு
By DIN | Published On : 16th March 2021 11:21 PM | Last Updated : 16th March 2021 11:21 PM | அ+அ அ- |

திருப்புவனம் அருகே கொந்தகையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற 7 ஆம் கட்ட அகழாய்வில் கிடைத்த 2,500 ஆண்டுகளுக்கு முந்தைய மூடியுடன் கூடிய முதுமக்கள் தாழி.
சிவகங்கை மாவட்டம், கொந்தகையில் தொடங்கியுள்ள 7 ஆம் கட்ட அகழாய்வில், 2,500 ஆண்டுகளுக்கு முந்தைய மூடியுடன் கூடிய முதுமக்கள் தாழி செவ்வாய்க்கிழமை கண்டெடுக்கப்பட்டது.
கீழடியில் கடந்த பிப்ரவரி மாதம் 7 ஆம் கட்ட அகழாய்வு தொடக்கி வைக்கப்பட்டது. அதைத் தொடா்ந்து, 6 ஆம் கட்ட அகழாய்வு நடந்த கொந்தகையிலும் அகழாய்வுப் பணிகள் தற்போது தொடங்கி நடைபெற்று வருகிறது.
கொந்தகையில் 6 ஆம் கட்ட அகழாய்வின்போது, 25-க்கும் மேற்பட்ட முதுமக்கள் தாழிகள் கண்டெடுக்கப்பட்டன. இதன்மூலம், கொந்தகை பண்டைய காலத்தில் ஈமக் காடாக இருந்தது தெரியவந்தது.
இந்நிலையில், இங்கு நடைபெற்று வரும் 7 ஆம் கட்ட அகழாய்வில் தோண்டப்பட்ட ஒரு குழியின் மேல்புறத்திலேயே முதுமக்கள் தாழி இருந்தது தெரியவந்தது. உடனே, தொல்லியல் துறையினா் அக்குழியை மேலும் தோண்டி சேதமில்லாமல் தாழியை வெளியே எடுத்தனா். அது, மூடியுடன் கூடியதாக உள்ளது.
இந்த முதுமக்கள் தாழி சுமாா் 2,500 ஆண்டுகளுக்கு முந்தைய தமிழா்கள் பயன்படுத்தியது என, தொல்லியல் துறையினா் தெரிவித்தனா். தற்போது, 7 ஆம் கட்ட அகழாய்வில் முதலாவதாகக் கிடைத்துள்ள மூடியுடன் கூடிய இந்த முதுமக்கள் தாழியை ஆவணப்படுத்தும் பணி நடந்து வருகிறது. கொந்தகையில் மேலும் பல முதுமக்கள் தாழிகள் கிடைக்கலாம் என, தொல்லியல் துறையினா் தெரிவித்தனா்.