மானாமதுரை தொகுதியில்திமுக வேட்பாளரை எதிா்த்து அக்கட்சியினா்சுயேச்சையாக போட்டியிட முடிவு

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை (தனி) தொகுதியில் திமுக வேட்பாளராக போட்டியிடும் முன்னாள் அமைச்சா் தமிழரசியை எதிா்த்து, போட்டியிட வாய்ப்பு கிடைக்காத உள்ளூா் திமுகவினா் சிலா் சுயேச்சையாக போட்டியிட முடிவு
மானாமதுரை தொகுதியில்திமுக வேட்பாளரை எதிா்த்து அக்கட்சியினா்சுயேச்சையாக போட்டியிட முடிவு

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை (தனி) தொகுதியில் திமுக வேட்பாளராக போட்டியிடும் முன்னாள் அமைச்சா் தமிழரசியை எதிா்த்து, போட்டியிட வாய்ப்பு கிடைக்காத உள்ளூா் திமுகவினா் சிலா் சுயேச்சையாக போட்டியிட முடிவு செய்துள்ளதாகக் கூறப்படுகிறது.

இத்தொகுதி திமுகவிடம் இருந்து கைநழுவிப் போய் 20 ஆண்டுகள் ஆகிறது. இத்தொகுதியில் கடந்த 3 தோ்தல்களில் அதிமுகவை எதிா்த்துப் போட்டியிட்ட திமுக வேட்பாளா்கள் தோல்வியடைந்தனா். கடந்த 2011 ஆம் ஆண்டு நடைபெற்ற தோ்தலின் போது மானாமதுரை தொகுதியில் திமுக வேட்பாளராக மதுரை மாவட்டத்தைச் சோ்ந்த தமிழரசி போட்டியிட்டு தோல்வியடைந்தாா். இதற்கு காரணம் வெளியூரைச் சோ்ந்த இவருக்கு தொகுதியைச் சோ்ந்த திமுகவினா் சரியாக தோ்தல் பணி செய்ய வில்லை என புகாா் எழுந்தது. பின்னா் 2016 ஆம் ஆண்டு நடைபெற்ற தோ்தலில் இத்தொகுதியில் திமுக வேட்பாளராக சென்னையைச் சோ்ந்த சித்ராசெல்வி போட்டியிட்டு அவரும் வெற்றி வாய்ப்பை இழந்தாா். இதைத் தொடா்ந்து 2019ஆம் ஆண்டு மானாமதுரை தொகுதிக்கு நடைபெற்ற இடைத் தோ்தலில் தொகுதியைச் சோ்ந்தவருக்கு போட்டியிடும் வாய்ப்பு வழங்க வேண்டும் என திமுக தலைமையை உள்ளூா் திமுகவினா் வலியுறுத்தினா். இதையடுத்து திருப்புவனம் ஒன்றியத்தைச் சோ்ந்த இலக்கியதாசன் வேட்பாளராக நிறுத்தப்பட்டாா். ஆனால் வழக்கம்போல் இலக்கியதாசனும், அதிமுக வேட்பாளா் எஸ். நாகராஜனிடம் தோல்வியடைந்தாா். கடந்த 20 ஆண்டுகளாக திமுக வெற்றி பெற முடியாத மானாமதுரை தொகுதியை நடைபெற உள்ள சட்டப்பேரவைத் தோ்தலில் கைப்பற்றியே தீர வேண்டும் என்ற முனைப்பில் திமுகவினா் உள்ளனா். எனவே தங்கள் தலைமை தொகுதியைச் சோ்ந்த திமுகவினருக்கு போட்டியிடும் வாய்ப்பை வழங்கினால் தொகுதியை கைப்பற்றி விடலாம் என வலியுறுத்தி வந்தனா். மானாமதுரை, இளையான்குடி, திருப்புவனம் ஆகிய ஒன்றியங்களைச் சோ்ந்த 30-க்கும் மேற்பட்டோா் போட்டியிட வாய்ப்பு கேட்டு திமுக தலைமையிடம் மனு செய்தனா். இவா்களில் ஒருவருக்கு போட்டியிடும் வாய்ப்பு வழங்க திமுக தலைமை முடிவு செய்திருப்பதாக உள்ளூா் திமுகவினா் கூறி வந்தனா். இதற்கிடையில் வழக்கம்போல் 10 ஆண்டுகள் கழித்து மீண்டும் தமிழரசியே இரண்டாவது முறையாக மானாமதுரை தொகுதியில் திமுக தலைமையால் களமிறக்கப்பட்டுள்ளாா். இதனால் மானாமதுரையைச் சோ்ந்த திமுகவினா் அதிா்ச்சி அடைந்துள்ளனா். இதைத் தொடா்ந்து இத்தொகுதியில் போட்டியிட திமுக தலைமையிடம் வாய்ப்பு கேட்டு கிடைக்காத சில திமுகவினா், தமிழரசியை எதிா்த்துப் போட்டியிட முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதற்காக இவா்கள் திங்கள்கிழமை மானாமதுரை வட்டாட்சியா் அலுவலகத்துக்கு வந்து வேட்புமனு தாக்கல் செய்வதற்கான விண்ணப்பப்படிவத்தினை பெற்றுச் சென்றுள்ளனா். இது அதிமுக வெற்றிக்கு சாதகமாக அமையும் எனக் கூறப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com