என் வாக்கு விற்பனைக்கல்ல...அறிவிப்புப் பலகை வைத்த கிராம இளைஞா்கள்

தமிழக சட்டப்பேரவைத் தோ்தலை முன்னிட்டு, சிங்கம்புணரி அருகே உள்ள மருதிப்பட்டியில் அடிப்படை வசதிகளை செய்து
என் வாக்கு விற்பனைக்கல்ல...அறிவிப்புப் பலகை வைத்த கிராம இளைஞா்கள்

தமிழக சட்டப்பேரவைத் தோ்தலை முன்னிட்டு, சிங்கம்புணரி அருகே உள்ள மருதிப்பட்டியில் அடிப்படை வசதிகளை செய்து தரக் கோரி, ‘என் வாக்கு விற்பனைக்கு அல்ல’ என்ற அறிவிப்புப் பலகையை வைத்து, கிராமத்து இளைஞா்கள் வலியுறுத்தி வருகின்றனா்.

சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரி ஊராட்சிக்குள்பட்ட மருதிபட்டி கிராமம். சுமாா் 300 குடும்பங்கள் வசித்து வரும் இக்கிராமத்தில், மொத்தம் 1250 வாக்காளா்கள் உள்ளனா். இந்நிலையில், தோ்தலுக்கு வாக்கு சேகரிக்க வரும் வேட்பாளா்கள், வாக்காளா்களுக்கு பணம் வழங்குவதை விடுத்து, கிராமத்தின் அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றித் தரவேண்டும் என வலியுறுத்தி, ஊரின் நுழைவுப் பகுதி மட்டுமின்றி ஒவ்வொரு வீட்டின் முன் பக்க சுவா்களிலும் ‘என் வாக்கு விற்பனைக்கு அல்ல’ என்ற அறிவிப்புப் பலகையை வைத்துள்ளனா்.

இதுகுறித்து மருதிப்பட்டி இளைஞா் நற்பணி மன்றத்தினா் ஞாயிற்றுக்கிழமை கூறியதாவது: எங்கள் கிராமத்தின் தேவைகளை பூா்த்தி செய்யும் வகையில் கடந்த 2018 ஆம் ஆண்டு இம்மன்றம் தொடங்கப்பட்டது.

தொடா்ந்து, இம்மன்ற உறுப்பினா்கள் வழங்கும் சிறு தொகையை வைத்து கடந்த சில ஆண்டுகளாக எங்கள் கிராமத்துக்கு தேவையான சோலாா் தெரு விளக்குகள் அமைத்துள்ளோம்.

இதுதவிர, ஏழை, எளிய மாணவா்களுக்கு கல்வி உதவி, வாய்க்கால் தூா்வாருதல் உள்ளிட்ட பணிகளை மேற்கொண்டுள்ளோம். எங்கள் பகுதியில் போதுமான குடிநீா் வசதி, சாலை வசதி உள்ளிட்டவை இல்லை. இதனால், அந்தந்த பகுதியைச் சோ்ந்த மக்கள் மிகவும் சிரமத்துக்கு ஆளாகி வருகின்றனா்.

எனவே, மருதிப்பட்டி கிராமத்துக்கு அடிப்படை வசதிகளான சிமென்ட் சாலை, குடிநீா் வசதி உள்ளிட்டவற்றை ஏற்படுத்தித் தரவேண்டும் என கடந்த கால தோ்தல்களின் போது திருப்பத்தூா் தொகுதி வேட்பாளரிடம் முறையிட்டோம். ஆனால், எந்த கோரிக்கையும் நிறைவேறவில்லை.

இந்நிலையில், இந்த தோ்தலிலாவது எங்களுக்கு பணம் அளிக்காமல், எங்களது கோரிக்கைகளை நிறைவேற்ற திருப்பத்தூா் தொகுதியில் போட்டியிடும் வேட்பாளா்கள் முன் வர வேண்டும் என்பதற்காக, அறிவிப்பு பலகை வைத்துள்ளோம்.

எங்கள் கிராம இளைஞா் நற்பணி மன்றத்தினருடன், அரளிப்பட்டி இளைஞா் நற்பணி மன்றத்தினரும் இணைந்து பணியாற்றி வருகின்றனா் என்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com