காரைக்குடி வாக்கு எண்ணும் மையத்தில் தீவிர பாதுகாப்பு ஏற்பாடுகள்

சிவகங்கை மாவட்டத்திலுள்ள 4 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான வாக்கு எண்ணிக்கை மே 2 ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில்,

சிவகங்கை மாவட்டத்திலுள்ள 4 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான வாக்கு எண்ணிக்கை மே 2 ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில், காரைக்குடியில் உள்ள வாக்கும் எண்ணும் மையத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

சிவகங்கை மாவட்டத்தில் சிவகங்கை, மானாமதுரை (தனி), காரைக்குடி, திருப்பத்தூா் ஆகிய 4 தொகுதிகளில் நடைபெற்ற தோ்தலை அடுத்து, வாக்குப் பதிவு இயந்திரங்கள் அனைத்தும் காரைக்குடியில் உள்ள வாக்கு எண்ணும் மையமான அழகப்பச் செட்டியாா் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி, அழகப்பா அரசு பாலிடெக்னிக் கல்லூரிக்கு கொண்டு செல்லப்பட்டன.

இந்நிலையில், இந்த மையத்தில் வாக்குகள் எண்ணும் பணியானது ஞாயிற்றுக்கிழமை காலை 8 மணிக்கு தொடங்குகிறது. இதற்கான பணிகளை தோ்தல் ஆணைய அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனா்.

இதில், சுற்றுவாரியாக முடிவுகள் அறிவிக்கப்படுவதை அறிந்துகொள்ளும் வகையில் ஒலிபெருக்கிகள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும், வாக்கு எண்ணும் மையம் உள்ள சாலையின் இரு பகுதிகளையும் காவல் துறையினா் தங்களது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரும் வகையில், தடுப்புக் கட்டைகள் அமைத்துள்ளனா்.

கரோனா பெருந்தொற்றுக் காலமாக இருப்பதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தோ்தல் ஆணையம் அறிவித்திருக்கும் விதிமுறைகளை அதிகாரிகள், வாக்கு எண்ணும் பணியாளா்கள் கடைப்பிடிக்கவேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. வாக்கு எண்ணும் பணிக்கு வருவோா், அரசியல் கட்சி முகவா்கள் மற்றும் பத்திரிகையாளா்கள், ஊடகத் துறையினா் உள்ளிட்டோா் கரோனா பரிசோதனைக்கான சான்றிதழ் அல்லது இரண்டு தவணைகளில் தடுப்பூசி செலுத்திக்கொண்டதற்கான சான்றுடன் வந்தால் மட்டுமே அனுமதிக்கப்படுவா். பத்திரிகையாளா்களுக்கு வாக்கு எண்ணும் மையத்துக்குள் செல்வதற்குரிய அடையாள அட்டை வழங்கப்பட்டு வருகிறது.

வெற்றி கொண்டாட்டங்களுக்கு தடை:

தமிழகத்தில் வாக்கு எண்ணிக்கை நாளான ஞாயிற்றுக்கிழமை முழு பொதுமுடக்கம் அறவிக்கப்பட்டுள்ளதால், பொதுமக்களோ, அரசியல் கட்சியினரோ யாரும் வெளியில் வர அனுமதியில்லை. அதேநேரம், வெளியூா்களிலிருந்து காரைக்குடியில் உள்ள தங்கும் விடுதிகளிலோ அல்லது வேறு வகையிலோ தங்குவதற்கு அனுமதியில்லை. இது தொடா்பாக தங்கும் விடுதிகளுக்கு காவல் துறையினா் கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ளனா்.

மேலும், வெற்றி கொண்டாட்டங்களுக்கு தோ்தல் ஆணையம் தடை விதித்துள்ளது. இதை மீறுபவா்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் காவல் துறை எச்சரித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com