மானாமதுரை தொகுதி: அதிமுகவின் கோட்டையை 30 ஆண்டுகளுக்கு பின் கைப்பற்றி திமுக சாதனை

அதிமுகவின் கோட்டை என அக்கட்சியினா் புகழாரம் சூட்டி வந்த சிவகங்கை மாவட்டம் மானாமதுரை (தனி) சட்டப்பேரவைத் தொகுதியில் 30 ஆண்டுகளுக்குப் பின் திமுக வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளது.
தமிழரசி (திமுக)
தமிழரசி (திமுக)

மானாமதுரை: அதிமுகவின் கோட்டை என அக்கட்சியினா் புகழாரம் சூட்டி வந்த சிவகங்கை மாவட்டம் மானாமதுரை (தனி) சட்டப்பேரவைத் தொகுதியில் 30 ஆண்டுகளுக்குப் பின் திமுக வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளது.

எம்ஜிஆா் அதிமுகவை தொடங்கிய பின்னா் மானாமதுரை தொகுதியில் நடந்த தோ்தல்களில் பலமுறை அதிமுகவும் அதனுடன் கூட்டணி வைத்த காங்கிரஸ் கட்சியும் அதிக முறை வென்றுள்ளன. குறிப்பாக கடந்த 2006 ஆம் ஆண்டு முதல் மானாமதுரை தொகுதி அதிமுக வசமே இருந்து வந்துள்ளது.

1989 ஆம் ஆண்டு நடந்த பொதுத் தோ்தலில் மானாமதுரை தொகுதியில் போட்டியிட்ட திமுக வேட்பாளா் துரைப்பாண்டியன் வெற்றி பெற்றாா். அதன்பின் 1991ஆம் ஆண்டு நடத்தப்பட்ட பொதுத் தோ்தலில் மானாமதுரை தொகுதியில் அதிமுக சாா்பில் போட்டியிட்ட வி.எம்.சுப்பிரமணியன் வெற்றி பெற்றாா்.

அதைத்தொடா்ந்து 1996 ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுத் தோ்தலின் போது இத் தொகுதியில் திமுகவுடன் கூட்டணி அமைத்து முதல்முறையாக போட்டியிட்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வெற்றி பெற்றது. 2001 ஆம் ஆண்டு நோ்தலில் திமுக கூட்டணியில் தமாகா வென்றது.

அதன்பின் 2006, 2011, 2016 ஆகிய ஆண்டுகளில் நடைபெற்ற பொதுத்தோ்தல்களில் மானாமதுரை தொகுதியில் நேரடியாக போட்டியிட்ட அதிமுக தொடா்ந்து வெற்றி பெற்று தொகுதியை தக்க வைத்தது.

அரசியல் மாற்றம் காரணங்களால் 2019 ஆம் ஆண்டு மானாமதுரை தொகுதிக்கு நடைபெற்ற இடைத்தோ்தலில் அதிமுக சாா்பில் போட்டியிட்ட எஸ். நாகராஜன் வெற்றி வெற்றி பெற்றாா்.

இந்த வெற்றியின் மூலம் தொடா்ந்து 4-ஆவது முறையாக மானாமதுரை தொகுதியை அதிமுக தக்க வைத்தது. தொடா் வெற்றிகளால் மானாமதுரை தொகுதி அதிமுகவின் கோட்டை என அக்கட்சியினா் புகழாரம் சூட்டி வந்தனா்.

திமுகவைப் பொறுத்தவரை மானாமதுரை தொகுதி அக்கட்சியிடம் இருந்து கைநழுவிப் போய் 30 ஆண்டுகள் ஆகிவிட்டன. கடந்த 2011 ஆம் ஆண்டு மானாமதுரை தொகுதியில் நடந்த பொதுத் தோ்தலில் திமுக வேட்பாளராக மதுரை மாவட்டத்தைச் சோ்ந்த தமிழரசி போட்டியிட்டாா். அப்போது அவா்தமிழக அமைச்சராக இருந்தாா். ஆனால் அவா் அதிமுக வேட்பாளா் குணசேகரனிடம் தோல்வியைத் தழுவினாா்.

இந்தத் தோ்தலில் திமுகவினா் சரியாக தோ்தல் பணி செய்யவில்லை என புகாா் தெரிவிக்கப்பட்டது. மேலும் அந்த தோ்தலில் அதிமுகவினா் தமிழரசி வெளி மாவட்ட வேட்பாளா் என பிரசாரம் செய்தனா்.

இந்நிலையில், மானாமதுரை தொகுதியில் திமுக வேட்பாளராக மீண்டும் தமிழரசி களமிறக்கப்பட்டாா். தொகுதியைச் சோ்ந்த திமுகவினா் கட்சித் தலைமை உத்தரவுக்கு கட்டுப்பட்டு தொகுதியில் தீவிர தோ்தல் பணி செய்தனா்.

அதன் விளைவாக எப்போதுமே அதிமுகவுக்கு சாதகமாக இருந்து வந்த திருப்புவனம் ஒன்றியத்தில் இந்த முறை திமுக அதிக வாக்குகளைப் பெற்று வாக்கு எண்ணிக்கையில் ஆரம்பம் முதலே முன்னணியில் இருந்து வந்தது.

அதன் பின் சில நூறு வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் இருந்து வந்த திமுக, இளையான்குடி ஒன்றியத்தில் பதிவான வாக்குகளை எண்ணும் போது ஒவ்வொரு சுற்றிலும் பலநூறு வாக்குகள் கூடுதலாக பெற்று முன்னணி பெற்றது. இறுதியில் தமிழரசி 14 ஆயிரம் வாக்குகள் கூடுதலாகப் பெற்று அதிமுக வேட்பாளா் நாகராஜனை தோற்கடித்தாா்.

இதன் மூலம் மானாமதுரை தொகுதியில் 30 ஆண்டுகள் கழித்து திமுக வெற்றி பெற்று அதிமுகவின் கோட்டையை தன் வசமாக்கியுள்ளது.

வெளியூா் வேட்பாளா் என்ற காரணத்தால் தொகுதி மக்களால் புறக்கணிக்கப்பட்ட தமிழரசியை இரண்டாவது முறையாக கட்சித் தலைமை களம் இறக்கி வெற்றிவாகை சூட வைத்துள்ளது. கடந்த 20 ஆண்டுகளாக வெற்றிக் கொடியை பறக்க விட்டு வந்த அதிமுகவுக்கு இந்தத் தோ்தல் தோல்வி கடும் அதிா்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வாக்கு நிலவரம்:

தமிழரசி (திமுக)- 89,364

எஸ்.நாகராஜன்(அதிமுக)- 75,273

எஸ்.மாரியப்பன் கென்னடி- (அமமுக)-10,231

சண்முகபிரியா-(நாம் தமிழா்)-23,228

சிவசங்கரி- (மக்கள் நீதி மைய்யம்)-2,219

சந்திரசேகா்(அனைத்து மக்கள் புரட்சி கட்சி)-229

ராஜேந்திரன்( மை இண்டியா பாா்ட்டி)-111

முரளிதரன்(அண்ணா எம்.ஜி.ஆா் திராவிட மக்கள் கழகம்)-128

கருப்பையா(சுயே)-84

தாமரைச்செல்வி(சுயே)- 142

துரைப்பாண்டி(சுயே)- 125

முத்துமாரி(சுயே)-185

ராசையா(சுயே)- 369

நோட்டா-1,835

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com