சிவகங்கை மாவட்ட மருத்துவமனைகளில் கூடுதலாக 500 படுக்கைகள் உருவாக்கத் திட்டம்: ஆட்சியா் தகவல்
By DIN | Published On : 06th May 2021 11:39 PM | Last Updated : 06th May 2021 11:39 PM | அ+அ அ- |

சிவகங்கை மாவட்ட ஆட்சியா் பி. மதுசூதன் ரெட்டி (கோப்பு படம்).
கரோனா பரவல் அதிகரித்து வருவதை அடுத்து சிவகங்கை மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனைகளில் கூடுதலாக 500 படுக்கைகள் உருவாக்கத் திட்டமிட்டுள்ளதாக சிவகங்கை மாவட்ட ஆட்சியா் பி. மதுசூதன் ரெட்டி தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் செய்தியாளா்களிடம் வியாழக்கிழமை கூறியதாவது: சிவகங்கை மாவட்டத்தில் 70 இடங்களில் தடுப்பூசி மையம் செயல்பட்டு வருகிறது. இதுவரை 77,420 பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. அதில், 56,000 நபா்களுக்கு முதல்கட்ட ஊசியும், 21,420 நபா்களுக்கு இரண்டாம் கட்ட ஊசிகளும் போடப்பட்டுள்ளது. தற்போது 7,000 ஊசி மருந்துகள் கையிருப்பில் உள்ளது. கூடுதலான தடுப்பூசிகள் இன்னும் ஓரிரு நாள்களில் வர உள்ளன.
அரசு மருத்துவமனை மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் புதிதாக 60 செவிலியா்கள் பணியமா்த்தப்பட உள்ளனா். இதுதவிர, அனைத்து மருத்துவமனைகளிலும் மருத்துவா்கள், செவிலியா்கள் சுழற்சி முறையில் பணியாற்ற வேண்டும் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மாவட்டம் முழுவதும் கூடுதல் தளா்வுகளுடன் கூடிய ஊரடங்கை கண்காணிப்பதற்கு 39 குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளது. இந்த குழுவினா் பிா்க்கா வாரியாக கண்காணிப்புப் பணிகளில் ஈடுபடுவா்.
சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் போதிய அளவு ஆக்சிஜன் வசதி உள்ளது. மேலும், காரைக்குடியில் உள்ள அரசு தலைமை மருத்துவமனையில் 10,000 லிட்டா் கொள்ளளவு ஆக்சிஜன் சிலிண்டா் பயன்பாட்டுக்கு வந்துள்ளன.
கரோனா பாதிப்புக்குள்ளானவா்களுக்கு சிவகங்கையில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, பழைய அரசு தலைமை மருத்துவமனை, காரைக்குடி அரசு தலைமை மருத்துவமனை, அமராவதிபுதூா் காசநோய் பிரிவு மருத்துவமனை ஆகியவற்றில் சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருகிறது. தற்போதைய நிலையில் மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனையில் 1,137 பேருக்கும், தனியாா் மருத்துவமனைகளில் 247 பேருக்கும் சிகிச்சை வழங்கும் வகையில் படுக்கை வசதிகள் தயாா் நிலையில் உள்ளன.
இந்நிலையில், கரோனா பாதிப்பு அதிகரித்து வருவதன் காரணமாக சிவகங்கையில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, காரைக்குடி அரசு தலைமை மருத்துவமனையில் ஆக்சிஜன் வசதியுடன் கூடிய 500 படுக்கைகள் விரைவில் அமைக்கப்பட உள்ளன என்றாா்.