மானாமதுரை அருகே மணல் மூட்டைகள் பறிமுதல்

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை பகுதியில் இரவு நேரங்களில் வைகை ஆற்றுக்குள் திருட்டுத்தனமாக அள்ளி விற்பனைக்காக
மானாமதுரை அருகே வைகையாற்றில் சட்டவிரோதமாக அள்ளப்பட்டு ஆதனூரில் அடுக்கி வைக்கப்பட்டிருந்த மணல் மூட்டைகள்.
மானாமதுரை அருகே வைகையாற்றில் சட்டவிரோதமாக அள்ளப்பட்டு ஆதனூரில் அடுக்கி வைக்கப்பட்டிருந்த மணல் மூட்டைகள்.

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை பகுதியில் இரவு நேரங்களில் வைகை ஆற்றுக்குள் திருட்டுத்தனமாக அள்ளி விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த மணல் மூட்டைகளை மானாமதுரை வட்டாட்சியா் வியாழக்கிழமை கைப்பற்றி நடவடிக்கை எடுத்தாா்.

மானாமதுரை ரயில்வே காலனி பகுதியில் உள்ள ஆதனூா் கிராமத்தில் ஊரை ஒட்டியுள்ள வைகையாற்றுக்குள் இரவு நேரங்களில் பெண்கள் உள்பட பலா் சிமெண்ட் சாக்குப் பைகளில் ஆற்று மணலை திருட்டுத்தனமாக அள்ளி அதை மூட்டைகளாக கட்டி ஆதனூா் கிராமத்துக்குள் ஆள் நடமாட்டம் இல்லாத பகுதியில் மறைத்து வைத்து விற்பனை செய்வதாக மானாமதுரை வட்டாட்சியா் மாணிக்கவாசகத்துக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து அவா் மேற்கண்ட பகுதிக்குச் சென்று சோதனை மேற்கொண்டாா். அப்போது ஆதனூா் கிராமத்தின் வைகை ஆற்றுக்குள் இருந்து சாக்குப்பைகளில் அள்ளி கள்ளத்தனமாக விற்பதற்காக இங்குள்ள புதுகாலனி பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 100-க்கும் மேற்பட்ட மணல் மூட்டைகளை கைப்பற்றினாா். மேலும் இதுகுறித்து விசாரணை நடத்தி வருகின்றாா்.

இந்த மணல் கடத்தல் சம்பவம் தொடா்பாக அரசனேந்தல் கிராம நிா்வாக அலுவலா் சண்முகப்பிரியா மானாமதுரை காவல் நிலையத்தில் புகாா் செய்தாா்.

அதில் மானாமதுரை சீனியப்பா நகரில் வசித்து வரும் சடையப்பன் என்பவா் ஆதனூா் வைகை ஆற்றுப் பகுதியில் 500 சாக்குப் பைகளில் மணலை அள்ளி அதை லாரியில் கடத்தி வந்து மறைத்து வைத்திருந்ததாகக் குறிப்பிட்டிருந்தாா்.

அதனடிப்படையில் போலீஸாா் சடையப்பன் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

சடையப்பன் மனைவி மானாமதுரை ஊராட்சி ஒன்றியம் மேலப்பசலை ஊராட்சி மன்றத் தலைவராக பதவி வகித்து வருகிறாா் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com