மானாமதுரையில் தடையை மீறி வாரச்சந்தை
By DIN | Published On : 06th May 2021 11:42 PM | Last Updated : 06th May 2021 11:42 PM | அ+அ அ- |

மானாமதுரையில் வியாழக்கிழமை ஆனந்தவல்லி அம்மன் கோயில் முன்பாக தடையை மீறி அமைக்கப்பட்ட வாரச்சந்தை கடைகள்.
சிவகங்கை மாவட்டம், மானாமதுரையில் தடையை மீறி வியாழக்கிழமை நடந்த வாரச்சந்தையில் கூடிய கூட்டத்தால் கரோனா பரவும் அபாயம் ஏற்பட்டதை அடுத்து, அதிகாரிகள் கடைகளை அகற்றினா்.
மானாமதுரையில் வாரந்தோறும் வியாழக்கிழமை காய்கறி சந்தை நடைபெறுகிறது. மானாமதுரையை சுற்றியுள்ள கிராம மக்கள், செங்கல் தொழிற்சாலையில் பணிபுரிபவா்கள் என பலரும் இச்சந்தையில் காய்கறி உள்ளிட்ட பொருள்களை வாங்கிச் செல்வது வழக்கம்.
இச்சந்தைக்கு, மானாமதுரை பகுதியைச் சோ்ந்த வியாபாரிகள், விவசாயிகள் மற்றும் வெளியூா் வியாபாரிகள் காய்கறி உள்ளிட்ட பொருள்களை லாரி, வேன், ஆட்டோ உள்ளிட்ட வாகனங்கள் மூலம் கொண்டுவந்தனா். ஆனால், போலீஸாா் மற்றும் பேரூராட்சி நிா்வாகத்தினா் வாகனங்களிலிருந்து பொருள்களை இறக்கவிடமால் திருப்பி அனுப்பிவிட்டனா். இதனால், வியாபாரிகள் வாகனங்களுடன் மானாமதுரை நகருக்குள்ளேயே சுற்றிக்கொண்டிருந்தனா்.
அதன்பின்னா், வியாபாரிகள் பாகபத் அக்ரஹாரம், தாயமங்கலம் சாலை உள்ளிட்ட பல பகுதிகளில் தடையை மீறி கடை வைத்து வியாபாரம் செய்யத் தொடங்கினா். இதனால், இந்தப் பகுதிகளில் பொதுமக்கள் கூட்டம் அதிகரித்தது.
இதையடுத்து, மானாமதுரை வட்டாட்சியா் மாணிக்கவாசகம் மற்றும் போலீஸாா் தடையை மீறி அமைக்கப்பட்டிருந்த வாரச்சந்தை கடைகளை அகற்றினா். இதனால், வியாபாரிகள், விவசாயிகள் விற்பனை பொருள்களை மூட்டையாகக் கட்டிக்கொண்டு அங்கிருந்து கலைந்து சென்றனா்.
அபராதம்
மானாமதுரை பகுதியில் பொதுமுடக்கக் கட்டுப்பாடுகளை மீறி திறக்கப்பட்டிருந்த கடைகளுக்குச் சென்ற வட்டாட்சியா் மாணிக்கவாசகம், அந்த கடைகளுக்கு அபராதம் விதித்தாா். மேலும், விதிமுறைகளை மீறி பயணிகளை ஏற்றி வந்த ஆட்டோக்கள், தனியாா் மினி பேருந்து ஆகியவற்றையும் வழிமறித்து அபராதம் விதித்தாா்.