சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரிக்கு ஆக்ஸிஜன் செறிவூட்டி வழங்கல்
By DIN | Published On : 11th May 2021 07:45 AM | Last Updated : 11th May 2021 07:45 AM | அ+அ அ- |

சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் திங்கள்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் ஆக்ஸிஜன் செறிவூட்டி இயந்திரத்தை வழங்கிய காரைக்குடி சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினா் எஸ். மாங்குடி.
சிவகங்கையில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிவகங்கை மக்களவைத் தொகுதி உறுப்பினா் காா்த்தி சிதம்பரம் குடும்பத்தின் சாா்பில் ஆக்ஸிஜன் செறிவூட்டி (குறைந்த அளவு ஆக்ஸிஜன் தேவைப்படும் நோயாளிக்கு பொருத்தும் இயந்திரம்) இயந்திரத்தை காரைக்குடி சட்டப்பேரவை உறுப்பினா் எஸ். மாங்குடி திங்கள்கிழமை வழங்கினாா்.
சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சுமாா் 300 படுக்கை வசதிகள் உள்ளன. அவற்றில் கரோனா பாதிக்கப்பட்ட நோயாளிகள் சிகிச்சை பெற்று வருகின்றனா். தற்போதைய சூழ்நிலையில் கரோனா தொற்று பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது.
இந்நிலையில், நோயாளிகளுக்கு ஆக்சிஜன் பற்றாக்குறையை தீா்ப்பதற்காக 5 ஆக்சிஜன் செறிவூட்டி (சுமாா் 2 அல்லது 3 கிலோ தேவைப்படும் நோயாளிகளுக்கு ஆக்சிஜன் வழங்கும் இயந்திரம்) இயந்திரத்தை சிவகங்கை மக்களவைத் தொகுதி உறுப்பினா் காா்த்தி சிதம்பரம் தனது குடும்பத்தின் சாா்பில் வழங்கினாா்.
அதனை சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் முதன்மையா் ஏ. ரத்தினவேலுவிடம், காரைக்குடி சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினா் எஸ். மாங்குடி திங்கள்கிழமை வழங்கினாா். குறைந்த பாதிப்புடன் கரோனா சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளுக்கு ஒவ்வொரு இயந்திரம் மூலம் சுமாா் 2 முதல் 3 கிலோ வரையிலான ஆக்சிஜனை வழங்க முடியும் எனவும், தற்போதைய நிலையில் நமது மருத்துவக் கல்லூரிக்கு பேருதவியாக இருக்கும் என மருத்துவா்கள் தெரிவித்தனா்.