மானாமதுரை அரசு மருத்துவமனையில் கரோனா நோயாளிகள் அனுமதி
By DIN | Published On : 17th May 2021 01:19 PM | Last Updated : 17th May 2021 01:21 PM | அ+அ அ- |

கரோனா தொற்று பாதிக்கப்பட்டவர்கள் அனுமதிக்கப்பட்டுள்ள மானாமதுரை அரசு மருத்துவமனை .
மானாமதுரை அரசு மருத்துவமனையில் கரோனா தொற்று பாதிப்புக்குள்ளானவர்கள் அனுமதிக்கப்பட்டு அவர்களுக்கு சிகிச்சை தொடங்கப்பட்டுள்ளது.
சிவகங்கை மாவட்டம், மானாமதுரை, திருப்புவனம், இளையான்குடி ஆகிய பகுதிகளில் கரோனா தொற்று பாதிப்புக்குள்ளானவர்கள் கண்டறியப்பட்டு அவர்கள் சிவகங்கை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.
இந்நிலையில் இந்த மருத்துவமனையில் கரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற வருபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் கூடி வருவதால் படுக்கை வசதி இல்லாமல் தொற்று பாதிக்கப்பட்டவர்களை அனுமதிப்பதில் தாமதநிலை ஏற்படுகிறது. இதையடுத்து மாவட்ட நிர்வாகத்தின் உத்தரவுப்படி சிவகங்கை மாவட்டத்தில் உள்ள வட்ட தலைமை அரசு மருத்துவமனைகளில் கரோனா சிகிச்சைக்கு தனி வார்டுகள் அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
அதன்படி மானாமதுரை, திருப்புவனம் ஆகிய இடங்களில் உள்ள வட்ட தலைமை அரசு மருத்துவமனைகளில் கரோனா சிறப்பு சிகிச்சை வார்டுகள் அமைக்கப்பட்டுள்ளன. இதைத்தொடர்ந்து தற்போது மானாமதுரை அரசு மருத்துவமனைக்கு கரோனா தொற்று அறிகுறிகளுடன் வருபவர்கள் இந்த மருத்துவமனையிலேயே சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.
தற்போது வரை இந்த மருத்துவமனையில் விரல் விட்டு எண்ணக்கூடிய அளவிலான தொற்று பாதிக்கப்பட்டவர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர். ஏற்கனவே மானாமதுரை அரசு மருத்துவமனையில் பணியில் உள்ள மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் கூடுதல் பணியாக தொற்று பாதித்தவர்களுக்கும் சிகிச்சை அளித்து வருகின்றனர்.