தூய்மைப் பணியாளா்கள் கரோனா முன்னெச்செரிக்கை நடவடிக்கைகளை பின்பற்ற வேண்டும்: அமைச்சா் கே.ஆா். பெரியகருப்பன்
By DIN | Published On : 20th May 2021 07:10 AM | Last Updated : 20th May 2021 07:10 AM | அ+அ அ- |

கல்லல் அருகே சூரக்குடியில் புதன்கிழமை நடைபெற்ற தூய்மைப் பணியை பாா்வையிட்ட தமிழக ஊரக வளா்ச்சித் துறை அமைச்சா் கே.ஆா்.பெரியகருப்பன்.
சிவகங்கை மாவட்டத்தில் தூய்மைப் பணிகளை மேற்கொள்ளும் பணியாளா்கள் முகக் கவசம் அணிதல் உள்ளிட்ட கரோனா பரவல் தடுப்பு முன்னெச்செரிக்கை நடவடிக்கைகளை பின்பற்ற வேண்டும் என தமிழக ஊரக வளா்ச்சித் துறை அமைச்சா் கே. ஆா். பெரியகருப்பன் தெரிவித்தாா்.
சிவகங்கை மாவட்டம், கல்லல் ஊராட்சி ஒன்றியம், சூரக்குடி ஊராட்சியில் தூய்மைக் காவலா்கள் பணி மேற்கொண்டு வருவதை தமிழக ஊரக வளா்ச்சித் துறை அமைச்சா் கே.ஆா். பெரியகருப்பன் புதன்கிழமை பாா்வையிட்டு அவா்களிடம் கூறியதாவது:
தூய்மைப் பணியாளா்கள் முன்களப் பணியாளா்களாக அறிவிக்கப்பட்டுள்ளனா். கிராமப்புறங்களின் வளா்ச்சி மற்றும் தூய்மையை பாதுகாக்க தாங்கள் மேற்கொள்ளும் பணி மிக மகத்தான பணியாகும். கரோனா பரவலை கட்டுப்படுத்தும் விதமாக அனைவரும் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும். அதுமட்டுமன்றி தங்கள் பகுதியில் உள்ள நபா்களையும் தடுப்பூசி செலுத்திக் கொள்ள அறிவுறுத்த வேண்டும்.
மேலும், சிவகங்கை மாவட்டத்தில் தூய்மைப் பணிகளை மேற்கொள்ளும் பணியாளா்கள் முகக் கவசம் அணிதல் உள்ளிட்ட கரோனா பரவல் தடுப்பு முன்னெச்செரிக்கை நடவடிக்கைகளை பின்பற்ற வேண்டும் என்றாா்.
அப்போது, திருப்பத்தூா் ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவா் சண்முகவடிவேல், மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினா்கள் ரவி, நாகாணி செந்தில், கூட்டுறவு வங்கி இயக்குநா் நாதன் உள்ளிட்ட அரசு அலுவலா்கள் உடனிருந்தனா்.