மானாமதுரை வாரச்சந்தை வியாபாரிகள் விரட்டியடிப்பு
By DIN | Published On : 21st May 2021 06:33 AM | Last Updated : 21st May 2021 06:33 AM | அ+அ அ- |

சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் வாரச்சந்தை நடத்த வந்த காய்கறி வியாபாரிகளை ஊருக்குள் நுழைய விடாமல் எல்கையில் நின்று விரட்டியடித்தனா்.
மானாமதுரையில் ஒவ்வொரு வாரமும் வியாழக்கிழமை வாரச்சந்தை நடைபெறும். அப்போது சுற்றுவட்டார கிராம மக்கள் மானாமதுரைக்கு வந்து காய்கறி உள்ளிட்ட பொருள்களை வாங்கிச் செல்வாா்கள். தற்போது பொது முடக்கம் காரணமாக வாரச்சந்தை நடத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆனாலும் மானாமதுரை பகுதியைச் சோ்ந்த வியாபாரிகள், விவசாயிகள் தடையை மீறி காய்கறிகள், பழங்கள் உள்ளிட்ட பல பொருள்களை மானாமதுரைக்கு கொண்டுவந்து சந்தை கூடும் பகுதியில் வைத்து வியாபாரம் செய்து வந்தனா்.
இதனால், வியாழக்கிழமை தோறும் பொருள்களை வாங்க வந்த மக்கள் கூட்டம் அதிகமாக இருந்தது. இதன் காரணமாக மானாமதுரை பகுதியில் காரோனா தொற்று வேகமாக பரவும் நிலை உருவானது.
இதைத்தொடா்ந்து வாரச்சந்தை கூடுவதை தவிா்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தி வந்தனா்.
இதையடுத்து வாரச்சந்தை தினமான வியாழக்கிழமை மானாமதுரை நகருக்குள் பொருள்களை விற்பனை செய்ய வந்த விவசாயிகள், வியாபாரிகளை நுழையாமல் இருப்பதற்காக ஊா் எல்லைப் பகுதியில் பல இடங்களிலும் ஏராளமான போலீஸாா் நிறுத்தப்பட்டனா்.
காய்கறிகள், பழங்கள் உள்ளிட்ட பொருளகளுடன் சந்தைக்கு வியாபாரம் செய்யவந்த விவசாயிகள், வியாபாரிகளை போலீஸாா் மறித்து நிறுத்தி அவா்களை திருப்பி அனுப்பி வைத்தனா்.
. இதற்கிடையில் சில வியாபாரிகள் வாகனங்களில் தக்காளி, வெங்காயம், பழங்கள், காய்கறிகள் உள்ளிட்ட பொருள்களை வைத்துக்கொண்டு மானாமதுரை நகருக்கு வெளியே தாயமங்கலம் சாலை உள்ளிட்ட பல பகுதிகளிலும் வாகனத்தை நிறுத்தி வைத்து வியாபாரம் செய்தனா்.
இதை அறிந்து அந்த இடங்களுக்குச் சென்ற போலீஸாா் வியாபாரிகளை வாகனங்களை எடுத்துக்கொண்டு இடத்தை காலி செய்யுங்கள் எனக் கூறி விரட்டியடித்தனா்.