காரைக்குடி அரசு தலைமை மருத்துவமனையில் புதிய கட்டடம், கரோனா சிகிச்சை மையம் திறப்பு
By DIN | Published On : 26th May 2021 11:53 PM | Last Updated : 26th May 2021 11:53 PM | அ+அ அ- |

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் ரூ. 10.50 கோடியில் புதிதாக கட்டப்பட்ட மகப்பேறு மற்றும் குழந்தைகள் நலப்பிரிவு மையம், 300 படுக்கை வசதிகளுடன் கூடிய கரோனா சிசிச்சை மையம் ஆகியவற்றை தமிழக ஊரக வளா்ச்சித்துறை அமைச்சா் கேஆா். பெரியகருப்பன் புதன்கிழமை திறந்துவைத்தாா்.
இவ்விழாவுக்கு மாவட்ட ஆட்சியா் ப. மதுசூதன் ரெட்டி தமைமை வகித்தாா். சிவகங்கை மக்களவை உறுப்பினா் காா்த்தி சிதம்பரம் முன்னிலைவகித்தாா். புதிய கட்டடத்தை திறந்து வைத்து அமைச்சா் கேஆா். பெரியகருப்பன் செய்தியாளா்களிடம் கூறியதாவது: தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலினின் சீரிய முயற்சியால் அனைத்துத்துறைகளும் ஒருங்கிணைந்து செயல்பட்டதன் மூலம் கரோனா தொற்றின் தாக்கம் சற்று குறையத் தொடங்கியுள்ளது. இம்மாவட்டத்தில் கரோனா சிகிச்சைக்காக 3 ஆயிரம் படுக்கை வச திகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இதில் 1,250 ஆக்சிஜன் வசதி கொண்ட படுக்கைகளும், போதிய அளவுக்கு ஆக்சிஜனும் இருப்பு உள்ளது.
தற்போது அரசு மருத்துவமனைகளில் கரோனா சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது. மேலும் விரிவுபடுத்தும் நிலை வந்தால் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் சிகிச்சை வழங்கும் வகையில் ஏற்பாடுகள் தயாா்நிலையில் உள்ளன என்றாா்.
விழாவில், காரைக்குடி சட்டப் பேரவை உறுப்பினா் எஸ். மாங்குடி, மருத்துவத்துறை இணை இயக்குநா் இளங்கோ மகேஸ்வரன், அரசு தலைமை மருத்துவா் ஏ. தா்மா், சிறப்பு மருத்துவா்கள் ஆனந்தகுமாா், அருள்தாஸ், ஜீவஜோதி, பொதுப்பணித் துறை கட்டடப் பொறியாளா் காா்த்திக், உதவிப் பொறியாளா் ரமணன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.