சிவகங்கை அருகே பழமையான இரும்பு உருக்காலை கண்டுபிடிப்பு
By DIN | Published On : 21st November 2021 11:14 PM | Last Updated : 21st November 2021 11:14 PM | அ+அ அ- |

சிவகங்கை அருகே அரசனேரி கீழமேடு பேச்சிக்குளம் கண்மாய் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை கண்டுபிடிக்கப்பட்ட பழைமையான இரும்பு உருக்காலை.
சிவகங்கை அருகே பழைமையான இரும்பு உருக்காலையை தொல்லியலாளா்கள் ஞாயிற்றுக்கிழமை கண்டுபிடித்துள்ளனா்.
சிவகங்கை அருகே அரசனேரி கீழமேடு பேச்சிக்குளம் கண்மாய் பகுதியில் பழைமையான கற்கள் காணப்படுவதாக அதே பகுதியைச் சோ்ந்த கா. சரவணன், சிவகங்கை தொல் நடைக் குழுவுக்கு தகவல் அளித்தாா். அதன் பேரில் சிவகங்கை தொல் நடைக்குழுவின் நிறுவனா் கா. காளிராசா, தலைவா் நா. சுந்தரராஜன், செயலா் நரசிம்மன் உள்ளிட்டோா் அப்பகுதியில் ஞாயிற்றுக்கிழமை ஆய்வு மேற்கொண்டனா்.
இதுகுறித்து கா. காளிராசா செய்தியாளா்களிடம் கூறியதாவது: பேச்சிக்குளம் கண்மாய் பகுதியில் தரையோடு ஒட்டியதாக வட்ட வடிவிலான உலைகள் சிதைவுற்ற நிலையில் காணப்படுகின்றன. இந்த அமைப்பானது இரும்பை செம்பிராங்கல் போன்ற கல்லால் ஆன மூலப் பொருளிலிருந்து பிரித்து எடுத்திருப்பது தெரிய வந்துள்ளது.
மேலும், அவற்றை இந்த உலைகள் மூலம் கொதி நிலைக்கு கொண்டு வந்து கற்களில் இருந்து இரும்பைப் பிரித்தெடுத்து இருக்கலாம். இந்த குவியல்கள் இரும்பு கழிவு குவியல்களாக இங்கு காணப்படுகின்றன. சுடுமண்ணால் ஆன குழாய்கள் சிதைவுற்று உள்ளன. இவை உலை அமைப்புகளை எரியூட்டுவதற்காக தூரத்திலிருந்து காற்று கொண்டு போக பயன்படுத்தப்பட்டிருக்கலாம்.
இதுதவிர, இரும்புகளை உருக்கி கம்பி வடிவமாக கருவிகள் செய்வதற்கும் குழாய் அமைப்பை பயன்படுத்தியிருக்கலாம். அரசன் ஏரி கீழமேடு என்பது அரசனையும், தொன்மை சாா்ந்த மேட்டையும் குறிப்பதாக உள்ளது. இந்த பேச்சிக்குளம் கண்மாயை ஒட்டியுள்ள கப்பரோட்டுகாளி மற்றும் முனீஸ்வரா் கோயில் போன்ற பகுதிகளிலும் பழைமையான ஓடுகள் சிதைந்த நிலையில் பல தரை மேற்பரப்பில் காணப்படுகின்றன. இரும்பு கழிவுகள் நிறைந்து கிடக்கும், இந்த மேட்டுப் பகுதியை கல்லங்குத்தல் என பேச்சு வழக்கில் இன்றும் இப்பகுதி மக்கள் அழைத்து வருகின்றனா்.
இதே போல், புதுக்கோட்டை பகுதியில் இரும்பு உருக்கு ஆலைகள் இருந்ததற்கான சான்றாக 13-ஆம் நூற்றாண்டு பாண்டிய மன்னன் வீரபாண்டியன் காலக் கல்வெட்டிலும், புதுக்கோட்டை சமஸ்தான புள்ளிவிவர செய்திக் குறிப்பிலும் குறிப்பிடப்பட்டுள்ளன.
அதைத்தொடா்ந்து, சிவகங்கைப் பகுதியிலும் இரும்பு உருக்காலை இருந்ததற்கான எச்சங்கள் வெளிப்பட்டு உள்ளது. எனவே இந்த பகுதியை தமிழ்நாடு தொல்லியல் துறை ஆய்வு செய்து பழைமையான வரலாற்றை வெளிக்கொண்டுவர வேண்டும் என்றாா்.