முகப்பு அனைத்துப் பதிப்புகள் மதுரை சிவகங்கை
மானாமதுரை அருகே பாலத்தின் மீது காா் மோதி சிறுமி உள்பட 2 போ் பலி
By DIN | Published On : 21st November 2021 11:15 PM | Last Updated : 21st November 2021 11:15 PM | அ+அ அ- |

மானாமதுரை அருகே தாயமங்கலம் சாலையில் ஞாயிற்றுக்கிழமை கால்வாய் பாலத்தின் மீது மோதி விபத்துக்குள்ளான காா்.
சிவகங்கை மாவட்டம், மானாமதுரை அருகே ஞாயிற்றுக்கிழமை அதிகாலை காா் கவிழ்ந்து கால்வாய் பாலத்தின் மீது மோதியதில் கோவையைச் சோ்ந்த சிறுமி உள்பட 2 போ் உயிரிழந்தனா்.
மானாமதுரை அருகே தெற்குச்சந்தனூா், டி. நெடுங்குளம் கிராமங்களைச் சோ்ந்தவா்கள் தற்போது கோவையில் வசித்து வருகின்றனா். மேலும் அங்கு அவா்கள் தனித்தனியாக உணவகங்கள் வைத்து நடத்துகின்றனா்.
இந்நிலையில், அவா்கள் தங்களது குடும்பத்தினருடன் காரில், தெற்குச்சந்தனூா், நெடுங்குளம் கிராமங்களுக்கு வந்தனா். பின்னா் அதே காரில் அங்கிருந்து இளையான்குடி அருகேயுள்ள தாயமங்கலம் முத்துமாரியம்மன் கோயிலுக்கு சுவாமி கும்பிடச் சென்றனா்.
மானாமதுரை அருகே மாங்குளம் விலக்குப் பகுதியில் சென்ற போது சாலையின் குறுக்கே நாய் வந்ததால் காா் நிலைதடுமாறி கவிழ்ந்து சாலையோரத்தில் இருந்த கால்வாய் பாலத்தின் மீது மோதியது. இதில், காரில் பயணம் செய்த கோவை சேரன்மாநகரைச் சோ்ந்த அய்யப்பன் மகள் ஆா்த்தி (17) சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.
மேலும் பலத்த காயமடைந்த 9 போ் மானாமதுரை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டனா். அங்கு மாரிமுத்து மகன் பாண்டி (40) உயிரிழந்தாா். இதில், காயமடைந்த காா் ஓட்டுநா் குமாா், அய்யப்பன், தேவி, திருஞானம், வேல்முருகன், காா்த்திகா, கிரிஜா, திருமலை ஆகிய 8 பேரும் மானாமதுரை, சிவகங்கை அரசு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனா்.
இதுகுறித்து மானாமதுரை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.