மானாமதுரை பகுதியில் காணை நோய் பாதிப்பால் மாடுகள், கன்றுகள் இறப்பு: பால் உற்பத்தி குறைந்ததால் தட்டுப்பாடு

மானாமதுரை பகுதியில் காணை நோய் பாதிப்பால் மாடுகள், கன்றுகள் பலியாகி வருவது தொடர்வதால் பால் உற்பத்தி பாதிக்கப்பட்டு இப் பகுதியில் கடும் பால் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. 
மானாமதுரை கூட்டுறவு சங்கத்தில் பால் வாங்க வரிசையில் காத்திருப்போர்.
மானாமதுரை கூட்டுறவு சங்கத்தில் பால் வாங்க வரிசையில் காத்திருப்போர்.

மானாமதுரை பகுதியில் காணை நோய் பாதிப்பால் மாடுகள், கன்றுகள் பலியாகி வருவது தொடர்வதால் பால் உற்பத்தி பாதிக்கப்பட்டு இப் பகுதியில் கடும் பால் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. 

சிவகங்கை மாவட்டம், மானாமதுரை, திருப்புவனம் பகுதிகளில் விவசாயம் என்பது பிரதான தொழிலாக நடந்து வருகிறது. விவசாயிகள் விவசாயத்துடன் கால்நடை வளர்ப்பிலும் ஈடுபட்டுளளனர். இவர்கள் கறவை மாடுகளில் பால் கறந்து நேரடியாகவும் கூட்டுறவு சங்கங்களிலும் பாலை விற்பனை செய்து லாபம் பார்க்கின்றனர். மானாமதுரை, திருப்புவனம் பகுதிகளில் உள்ள கூட்டுறவு பால் சங்கங்களில் உறுப்பினர்களாக உள்ள கால்நடை வளர்ப்போரிடம் காலை, மாலை நேரங்களில் பால் கொள்முதல் செய்யப்பட்டு பொதுமக்களுக்கு சில்லரை விலையில் விற்பனை செய்தது போக மீதி பால் காரைக்குடி ஆவின் நிறுவனத்திற்கு அனுப்பி வைக்கப்படுகிறது. 

சில மாதங்களுக்கு முன்பு வரை மாடுகளின் கறவைத்திறன் அதிகமாக இருந்ததால் கூட்டுறவு சங்கங்களுக்கு பால் வரத்து ஒவ்வொரு நாளும் கூடிக்கொண்டே வந்தது. இதனால் காரைக்குடி ஆவின் நிறுவனத்திற்கு ஏற்றுமதி செய்யப்படும் பாலின் அளவும் தினமும் அதிகரித்து. தற்போது வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால் மழைக்காலங்களில் மாடுகளைத் தாக்கும் காணை நோயால் மானாமதுரை, திருப்புவனம் பகுதிகளில் அதிகமாக மாடுகள் பாதிக்கப்பட்டுள்ளன. மானாமதுரை ஒன்றியத்தில் கீழப்பசளை, சங்கமங்கலம், தீயனூர், கீழ்மேல்குடி, அன்னவாசல், கால்பிரிவு உள்ளிட்ட பல கிராமங்களில் காணை நோய் தாக்கி ஏராளமான மாடுகள், கன்றுகள் உயிரிழந்து வருகின்றன.

கடந்த 20 நாட்களில் மட்டும் இப்பகுதிகளில் 40 க்கும் மேற்பட்ட மாடுகள், கன்றுகள் பலியாகி இருப்பதாக கால்நடை வளர்க்கும் விவசாயிகள் தெரிவித்தனர். காணை உள்ளிட்ட நோய் பாதிப்புகளுக்கு மாடுகளுக்கு சிகிச்சை அளிக்க மானாமதுரை பகுதியில் போதுமான அரசு கால்நடை மருத்துவமனைகள், கால்நடை மருந்தகங்களில் போதுமான மருத்துவர்கள் இல்லாத நிலை உள்ளது. கால்நடை மருந்தகங்களில் பணியாற்றும் ஊழியர்கள் மாடுகளுக்கு சிகிச்சை அளிக்கும் நிலை உள்ளது. இருந்தாலும் போதுமான ஊழியர்கள் இல்லாததால் ஆடு, மாடுகளுக்கு சிகிச்சை அளிக்க முடியாத நிலை தொடர்வதால் மாடுகளை காணை உள்ளிட்ட நோய்கள் தாக்கி வருவதாக புகார் எழுந்துள்ளது.

ஏற்கனவே கொசுக்கடியால் மாடுகளின் கறவைத்திறன் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது காணை நோய் பாதிப்பு காரணமாக மாடுகளின் கறவைத்திறன் மேலும் குறைந்து பால் உற்பத்தி நாளுக்கு நாள் குறைந்து வருகிறது. இதனால் மானாமதுரை, திருப்புவனம் பகுதிகளில் உள்ள கூட்டுறவு பால் சங்கங்களுக்கு உற்பத்தியாளர்கள் வழங்கும் பாலின் அளவும் தினந்தோறும் குறைந்து கொண்டே வருகிறது. பொதுமக்களுக்கு சில்லரை விலையில் பால் விற்பனை செய்தது போக காரைக்குடி ஆவின் நிறுவனத்துக்கு பால் அனுப்ப முடியாத நிலை உருவாகியுள்ளது. மானாமதுரை, திருப்புவனம் பகுதிகளில் உள்ள கூட்டுறவு பால் சங்கங்களில் அதிகாலையிலேயே பால் வாங்குவதற்கு நீண்ட வரிசை காணப்படுகிறது. அதிகாலைப் பொழுதில் வந்தால் மட்டுமே பால் வாங்க முடியும் என்ற நிலை ஏற்பட்டுள்ளதால் காலையிலேயே ஏராளமானோர் கூட்டுறவு பால் சங்கங்களில் குவிந்து விடுகின்றனர். 

இந்த சங்கங்களில்  பொதுமக்கள் கேட்கும் அளவுக்கு பால் வழங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. காணை நோய் பாதிப்பும் கொசுக்கடியும் குறைந்து மழை இல்லாமல் சீரான காலநிலை நிலவும்போதுதான்  மாடுகளின் கறவைத்திறன் அதிகரித்து பால் உற்பத்தி கூடும். அப்போதான் பால் தட்டுப்பாடு பிரச்னைக்கு தீர்வு ஏற்படும் என பால் உற்பத்தியாளர்கள் தெரிவித்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com