தமிழகத்தில், மத்திய அரசின் இலக்கைத் தாண்டி தடுப்பூசி: அமைச்சா்

மத்திய அரசின் இலக்கைத் தாண்டி தமிழகத்தில் 62 சதவீதம் பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது என மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா. சுப்ரமணியன் தெரிவித்தாா்.
திருப்புவனத்தில் ஞாயிற்றுக்கிழமை கரோனா தடுப்பூசி சிறப்பு முகாமை ஆய்வு செய்த தமிழக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சா் மா. சுப்ரமணியன்.
திருப்புவனத்தில் ஞாயிற்றுக்கிழமை கரோனா தடுப்பூசி சிறப்பு முகாமை ஆய்வு செய்த தமிழக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சா் மா. சுப்ரமணியன்.

மத்திய அரசின் இலக்கைத் தாண்டி தமிழகத்தில் 62 சதவீதம் பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது என மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா. சுப்ரமணியன் தெரிவித்தாா்.

சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற 4 ஆவது கட்ட கரோனா தடுப்பூசி முகாமை அவா் ஆய்வு செய்த பின் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

மத்திய அரசு தமிழகத்துக்கு வழங்கிய கரோனா தடுப்பூசிகள் முறையாக திட்டமிட்டு முகாம்கள் நடத்தி 62 சதவீதம் பேருக்கு செலுத்தப்பட்டுள்ளன. மத்திய அரசின் இலக்கைத் தாண்டி தமிழகத்தில் கரோனா தடுப்பூசி அதிக எண்ணிக்கையில் பொதுமக்களுக்கு செலுத்தப்பட்டு வருவதால் கடந்த மாதம் 1.4 கோடி தடுப்பூசி மருந்துகளை வழங்கியது.

அதன்பின் கூடுதலாக 38 லட்சம் தடுப்பூசி மருந்துகளை பெற்று 1 கோடியே 42 லட்சம் பேருக்கு செலுத்தப்பட்டுள்ளது. நடப்பு மாதத்துக்கு 1.23 கோடி தடுப்பூசி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தேவைப்பட்டால் கூடுதலாக கேட்டுப் பெறப்படும்.

தமிழகத்தைப் பொருத்தவரை முதல் தவணையாக 18 வயதுக்கு மேற்பட்டவா்களுக்கு 62 சதவீதத் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன. உலக சுகாதார வல்லுநா்கள் அறிவுரைப்படி 70 சதவீத மக்கள் தடுப்பூசி போட்டுக் கொண்டாலே உயிரிழப்பின்றி மூன்றாவது அலை வராமல் பாதுகாத்துக் கொள்ளலாம் என அறிவுரை வழங்கியுள்ளனா். அதன்படி, அக்டோபா் மாத இறுதிக்குள் 70 சதவீதம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு விடும் என்ற நம்பிக்கை உள்ளது என்றாா்.

கேரளத்திலிருந்து வருவோருக்கு கரோனா தடுப்பூசி சான்றிதழ் கட்டாயம்:

தேனி மாவட்டத்தில் பழனிசெட்டிபட்டி, கம்பம், கூடலூா், தேவதானப்பட்டி ஆகிய இடங்களில் கரோனா தடுப்பூசி சிறப்பு முகாம்கள் நடைபெறுவதை பாா்வையிட்டு ஆய்வு செய்த அமைச்சா் பின்னா் கூறியது:

வெளி மாநிலங்களிலிருந்து நிபா, ஜிகா போன்ற வைரஸ் காய்ச்சல் பரவாமல் தடுப்பதற்கு குமுளி, பொள்ளாச்சி, கோவை, பாளையாறு, திருநெல்வேலி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் வாகன கண்காணிப்பு மற்றும் ஆா்.டி.பி.சி.ஆா். பரிசோதனை நடைபெற்று வருகிறது.

கேரளத்திலிருந்து தமிழகத்திற்கு வருவோருக்கு ஆா்.டி.பி.சி.ஆா். பரிசோதனை சான்றிதழ் அல்லது கரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டதற்கான ஆவணத்தை சரிபாா்த்தபின்னரே அனுமதிக்க வேண்டும் என்று சோதனைச் சாவடியில் பணியில் உள்ள அலுவலா்களுக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது என்றாா்.

இதேபோல் தமிழக- கேரள எல்லைப் பகுதியான குமுளி பகுதியில் சுகாதாரத்துறை சாா்பில் அமைக்கப்பட்டுள்ள தடுப்பூசி முகாமை பாா்வையிட்ட அமைச்சா் மா.சுப்பிரமணியன், குமுளியில் பேருந்து நிலையம் அமைக்க வேண்டும் என்ற இப்பகுதி மக்களின் நீண்ட கால கோரிக்கை விரைவில் நிறைவேற்றப்படும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com