நவராத்திரி: மானாமதுரை, திருப்புவனத்தில் களைகட்டும் கொலு அலங்காரம்

மானாமதுரை, திருப்புவனம் பகுதிகளில் நவராத்திரி விழா தொடங்கியது. கோயில்களில் கண்ணைக் கவரும் கொலு அலங்காரங்கள் இடம்பெற்றுள்ளன.
மானாமதுரை  வேதியரேந்தல் விலக்கு பகுதியில் உள்ள மகா பஞ்சமுக பிரத்தியங்கிரா தேவி கோயிலில் தொடங்கியுள்ள நவராத்திரி விழாவை முன்னிட்டு அமைக்கப்பட்டுள்ள கொழு அலங்காரம்
மானாமதுரை வேதியரேந்தல் விலக்கு பகுதியில் உள்ள மகா பஞ்சமுக பிரத்தியங்கிரா தேவி கோயிலில் தொடங்கியுள்ள நவராத்திரி விழாவை முன்னிட்டு அமைக்கப்பட்டுள்ள கொழு அலங்காரம்

மானாமதுரை, திருப்புவனம் பகுதிகளில் நவராத்திரி விழா தொடங்கியது. கோயில்களில் கண்ணைக் கவரும் கொலு அலங்காரங்கள் இடம்பெற்றுள்ளன.

மானாமதுரை: சிவகங்கை மாவட்டம் மானாமதுரை, திருப்புவனம், இளையான்குடி பகுதிகளில் உள்ள கோயில்களில் வியாழக்கிழமை நவராத்திரி விழா தொடங்கியது. கோயில்களில் கண்ணைக் கவரும் வகையில் கொலு அலங்காரம் அமைக்கப்பட்டுள்ளது. 

மானாமதுரையில் உள்ள ஆனந்தவல்லி அம்மன் கோயிலில் நவராத்திரி விழா தொடங்கியதை முன்னிட்டு   அம்மன் சன்னதி மண்டபத்தில் உற்சவர் ஆனந்தவல்லி அம்மனுக்கு விழா நடைபெறும் பத்து நாள்களும்  இரவு வெவ்வேறு அலங்காரம் செய்து சிறப்பு பூஜைகள், தீபாராதனைகள் நடைபெறும். 

மானாமதுரையில் புரட்சியார்பேட்டை பகுதியில் உள்ள தியாக விநோதப் பெருமாள் கோயிலில் நவராத்திரி விழா தொடங்கியது. இதனை முன்னிட்டு சொர்க்கவாசல் மண்டபத்தில் கொலு அலங்காரம் செய்து வைக்கப்பட்டுள்ளது. விழா நாள்களில் தினமும் இரவு உற்சவர் தியாக விநோதப் பெருமாள், ஸ்ரீதேவி - பூதேவி சமேதராய் அலங்காரத்துடன் வெவ்வேறு வாகனங்களில் எழுந்தருளி கோயில் உள்பிரகாரத்தை வலம் வந்து பக்தர்களுக்கு அருள் பாலிப்பார். 

மானாமதுரை ரயில் நிலையம் எதிரே உள்ள பூர்ணசக்கர விநாயகர் கோயில், தாயமங்கலம் சாலையில் உள்ள அங்காள பரமேஸ்வரி அம்மன் கோயிலிலும் நவராத்திரி விழா தொடங்கியுள்ளது. இக்கோயிலிலும்  கொலு அலங்காரம் கண்காட்சியாக வைக்கப்பட்டுள்ளது. 

மானாமதுரை அருகே வேதியரேந்தல் விலக்கு பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ மகா பஞ்சமுக பிரத்தியங்கிரா தேவி கோயிலில் நவராத்திரி விழா தொடங்கியதை முன்னிட்டு கோயில் யாகசாலையில் பிரம்மாண்ட கொலு அலங்காரம் கண்காட்சியாக வைக்கப்பட்டுள்ளது. 

விழா நடைபெறும் 10 நாள்களும் மூலவர் பிரத்யங்கிரா தேவிக்கு அபிஷேகங்கள், ஆராதனைகள் நடத்தி சிறப்பு அலங்காரம் செய்து பூஜைகள் நடைபெறும். அதேபோல் யாகசாலையில் உள்ள கொலு அலங்காரத்திற்கும் பிரத்தியங்கிராதேவி உருவப்படத்திற்கும் சிறப்பு பூஜைகள் நடத்தப்படும்.

மானாமதுரை ஒன்றியம் கரிசல்குளம் கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீ கேட்டவரம் தரும் முத்துமாரியம்மன் கோயிலில் நவராத்திரி விழா தொடங்கியுள்ளது. இதையொட்டி கோயிலில் கொலு அலங்காரம் வைக்கப்பட்டுள்ளது. தினமும் முத்துமாரி அம்மனுக்கு அபிஷேகங்கள், ஆராதனைகள், சிறப்பு பூஜைகள் நடைபெறும். இதற்கான ஏற்பாடுகளை கோயில் அறங்காவலர் செர்டு எல். பாண்டி செய்துள்ளார்.  

 திருப்புவனம் 

திருப்புவனம் புஷ்பவனேஸ்வரர் சமேத சௌந்தரநாயகி அம்மன் கோயிலில் நவராத்திரி விழா தொடங்கியது. இதையொட்டி விழா நாள்களில் தினமும் இரவு சௌந்திரநாயகி அம்மன் அலங்காரத்துடன் வெவ்வேறு அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிப்பார். திருப்புவனம் புதூர் பகுதியில் அமைந்துள்ள முத்துமாரியம்மன் கோயில், அருகே உள்ள மடப்புரம் காளி கோயிலில் நவராத்திரி விழா தொடங்கியுள்ளது.

மானாமதுரை அருகே கரிசல்குளம் முத்துமாரியம்மன் கோயிலில் நவராத்திரியை முன்னிட்டு காட்சிக்கு வைக்கப்பட்டுள்ள கொலு அலங்காரம்.
மானாமதுரை அருகே கரிசல்குளம் முத்துமாரியம்மன் கோயிலில் நவராத்திரியை முன்னிட்டு காட்சிக்கு வைக்கப்பட்டுள்ள கொலு அலங்காரம்.

 இளையான்குடி 

 இளையான்குடி அருகேயுள்ள பிரசித்தம் பெற்ற தாயமங்கலம் முத்துமாரியம்மன் கோயிலில் நவராத்திரி விழா தொடங்கியுள்ளதால் தினமும் இரவு மூலவர் முத்துமாரி அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்து பூஜைகள் நடைபெறும். இதேபோல் உற்சவருக்கும் சிறப்பு பூஜைகள் நடத்தப்படும். இளையான்குடி வாள்மேல் நடந்த அம்மன் கோயிலில் நவராத்திரி விழா தொடங்கியதை முன்னிட்டு அம்மனுக்கு விழா நாள்களில் இரவு சிறப்பு அலங்காரம் செய்து பூஜைகள் நடைபெறுகிறது. 

 கொலு அலங்கார பொம்மைகள் விற்பனை மும்முரம் 

மானாமதுரை, திருப்புவனம், இளையான்குடி பகுதிகளில் நவராத்திரி விழா தொடங்கியதை முன்னிட்டு மண்பாண்ட பொருள்கள் தயாரிப்புக்கு பெயர்போன மானாமதுரையில் மண்பாண்ட தொழிலாளர்கள் கைவண்ணத்தில் உருவாக்கப்பட்டுள்ள கொலு அலங்கார பொம்மைகள் இங்குள்ள குலாலர் தெரு பகுதியில் அமைந்துள்ள மண்பாண்டத் தொழிலாளர்கள் கூட்டுறவு சங்கத்தில் விற்பனைக்காக காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. 

தினமும் உள்ளூர் மற்றும் வெளியூரைச் சேர்ந்த மக்கள்  இங்கு வந்து கொலு பொம்மைகளை தேர்வு செய்து ஆர்வமுடன் வாங்கி செல்கின்றனர். இதனால் மானாமதுரையில் கொலு அலங்கார பொம்மைகள் விற்பனை சூடு பிடித்துள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com