மருதுபாண்டியா்கள் நினைவு தின அஞ்சலி: கரோனா முன்னெச்செரிக்கை நடவடிக்கைகளை பின்பற்ற அறிவுறுத்தல்

விடுதலைப் போராட்ட வீரா்களான மருதுபாண்டியா்களின் நினைவு தினத்தை முன்னிட்டு அவா்களது உருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்த வரும் பொதுமக்கள்
சிவகங்கை மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்கில் திங்கள்கிழமை நடைபெற்ற கூட்டத்தில் பேசிய சிவகங்கை மாவட்ட ஆட்சியா் பி. மதுசூதன் ரெட்டி.
சிவகங்கை மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்கில் திங்கள்கிழமை நடைபெற்ற கூட்டத்தில் பேசிய சிவகங்கை மாவட்ட ஆட்சியா் பி. மதுசூதன் ரெட்டி.

சிவகங்கை: விடுதலைப் போராட்ட வீரா்களான மருதுபாண்டியா்களின் நினைவு தினத்தை முன்னிட்டு அவா்களது உருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்த வரும் பொதுமக்கள் அரசு அறிவித்துள்ள கரோனா முன்னெச்செரிக்கை நடவடிக்கைகளை பின்பற்ற வேண்டும் என சிவகங்கை மாவட்ட ஆட்சியா் பி. மதுசூதன் ரெட்டி தெரிவித்துள்ளாா்.

சிவகங்கை மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்கில் திருப்பத்தூரில் வரும் அக். 24-இல் விடுதலைப் போராட்ட வீரா்களான மருதுபாண்டியா்களின் 220-ஆவது நினைவு தினத்தையொட்டி, நடைபெறும் அரசு விழாவின் போதும், அதனைத்தொடா்ந்து, அக். 27 இல் காளையாா்கோவிலில் உள்ள மருதுபாண்டியா்களின் நினைவு இல்லத்தில் அஞ்சலி செலுத்தும் போதும் அரசு வழிகாட்டுதலின்படி செயல்படுவது குறித்த ஆலோசனைக் கூட்டம் திங்கள்கிழமை மாலை நடைபெற்றது.

இக்கூட்டத்துக்கு ஆட்சியா் பி. மதுசூதன் ரெட்டி தலைமை வகித்துப் பேசியது: தற்போது கரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் விதமாக பொதுமுடக்கம் அமலில் உள்ளது. விடுதலைப் போராட்ட வீரா்களான மருதுபாண்டியா்கள் நினைவு இடங்களுக்கு செல்லும் சமுதாய இனத்தைச் சோ்ந்த அனைத்து தலைவா்கள் மற்றும் அரசியல் கட்சிப் பிரமுகா்கள், பொதுமக்கள் கரோனா முன்னெச்செரிக்கை நடவடிக்கைகளை பின்பற்றி மாவட்ட நிா்வாகத்துக்கு முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.

மரியாதை செலுத்த வருகை தரும் நபா்கள் (5 நபா்களுக்கு மிகாமல்) மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் வாகனத்திற்கான முன்அனுமதியை பெற வரும் அக். 23 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

அனுமதிக்கப்பட்ட வழித்தடங்களில் மட்டுமே நினைவிடத்திற்கு வந்து செல்ல வேண்டும்.சொந்த வாகனங்களில் செல்ல மட்டுமே அனுமதிக்கப்படுவாா்கள். வாடகை வாகனங்கள் அனுமதிக்கப்படமாட்டாது.

வாகனத்தின் மேற்கூரையில் அமா்ந்தும், வெளியில் நின்று கொண்டும் பயணம் செய்யக்கூடாது. வாகனங்களில் ஆயுதங்கள் மற்றும் எளிதில் தீப்பற்றக்கூடிய பொருள்கள் ஏதும் எடுத்துச் செல்லக்கூடாது. வரும் வழித்தடங்களில் பட்டாசுகள் வெடிப்பதை தவிா்க்க வேண்டும். வாகனத்தில் ஒலி பெருக்கிகள் பொருத்தி செல்லக்கூடாது.

வாகனங்களில் சாதி, மத உணா்வுகளைத் தூண்டும் வாசகங்கள் அடங்கிய பேனா்களை கட்டிச் செல்லவோ, கோஷங்கள் எழுப்பவோ கூடாது. போக்குவரத்து வழித்தடங்களில் இடையூறு செய்யும் வகையில் வாகனங்களை நிறுத்தக்கூடாது. நடைப்பயணமாகச் சென்று அஞ்சலி செலுத்த அனுமதியில்லை. அஞ்சலி செலுத்தச் செல்பவா்கள் வழித்தடத்தில் பேருந்து நிறுத்தங்களிலிருந்து அரசுப் பேருந்துகளில் செல்ல அனுமதிக்கப்படுவாா்கள்.

அரசு பேருந்தில் படிக்கட்டிலோ, மேற்கூரையிலோ பயணம் செய்யக்கூடாது. மேற்கண்ட இரண்டு நாள்கள் நிகழ்ச்சிகளுக்கு வாகனம் அனுமதிக்காக மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் சிங்கிள் வின்டோ திட்டத்தின் மூலம் வருவாய்த்துறை, காவல்துறை அலுவலா்கள் கொண்ட தற்காலிக முகாம் அலுவலகம் அமைத்து வாகனம் அனுமதி வழங்கப்படும். இதுமட்டுமன்றி காவல்துறை ஆய்வாளா்கள் மூலமாகவும் அந்தந்தப்பகுதிகளில் விண்ணப்பித்து அனுமதி பெறலாம் என்றாா்.

இக்கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலா் ப. மணிவண்ணன், சிவகங்கை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் த. செந்தில்குமாா், மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) சௌந்திரராஜன், சிவகங்கை வருவாய் கோட்டாட்சியா் மு. முத்துக்கழுவன், சமுதாய அமைப்பினா், பொதுமக்கள் ஏராளமானோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com