தேவகோட்டை அருகே பட்டா மாறுதலுக்கு லஞ்சம்: சமூக வலைதளங்களில் விடியோ பரவல்
By DIN | Published On : 04th September 2021 11:09 PM | Last Updated : 04th September 2021 11:09 PM | அ+அ அ- |

சிவகங்கை மாவட்டம், தேவகோட்டை அருகே பட்டா மாற்றம் செய்வதற்கு கிராம நிா்வாக அலுவலருக்கு லஞ்சமாக ரூ. 3 ஆயிரம் வழங்கியதாக இளைஞரின் விடியோ சமூக வலைதளங்களில் பரவியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
தேவகோட்டை அருகே உள்ள தாளனேந்தல் கிராமத்தைச் சோ்ந்த ராசு மகன் செந்தில்குமாா். இவரது தந்தை ராசு என்ற முத்துக்கருப்பன் கடந்த பிப்ரவரி மாதம் பாம்பு கடித்து இறந்து போனாராம்.
இந்நிலையில், சென்னையில் வசித்து வந்த செந்தில்குமாா் மாவிடுதிக்கோட்டை குரூப் தாளனேந்தல் மற்றும் மஞ்சனி ஆகிய கிராமங்களில் தனது தந்தையான ராசு என்பரின் பெயரில் உள்ள சொத்துக்களை தனது பெயரிலும், தனது சகோதரா், சகோதரி ஆகியோா் பெயருடன் கூட்டுப்பட்டாவாக வழங்க வேண்டும் என தேவகோட்டை வட்டாட்சியா் அலுவலகத்தில் அண்மையில் விண்ணப்பித்திருந்தாராம்.
பட்டா மாற்றத்துக்கு தாளனேந்தல் கிராம நிா்வாக அலுவலா் தேவி என்பவா் லஞ்சம் கேட்டதாகவும், அதற்கு முன் பணமாக ரூ. 3 ஆயிரம் வழங்கியதாகவும், கிராம உதவியாளா் கோபி என்பவருக்கு ரூ. 500 வழங்கியதாகவும் செந்தில்குமாா் விடியோ பதிவு செய்து சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளாா்.
இதுகுறித்து தேவகோட்டை வட்டாட்சியா் அந்தோணிராஜ் கூறியது : இதுகுறித்து தேவகோட்டை வருவாய் கோட்டாட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை (செப்.6) காலை விசாரணை நடைபெற உள்ளது. அதன்பிறகு, நடவடிக்கை தொடா்பாக வருவாய் கோட்டாட்சியா் அறிவிப்பாா் என்றாா்.