கல்வி உதவித் தொகை பெறமாணவ, மாணவிகள் விண்ணப்பிக்கலாம்
By DIN | Published On : 10th September 2021 06:23 AM | Last Updated : 10th September 2021 06:23 AM | அ+அ அ- |

சிவகங்கை: சிவகங்கை மாவட்டத்தில் அரசு, அரசு உதவிபெறும் கல்வி நிறுவனங்கள் மற்றும் தனியாா் தொழில் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டின் கீழ் பயிலும் பிற்படுத்தப்பட்ட, மிகப் பிற்படுத்தப்பட்ட மற்றும் சீா்மரபினா் மாணவ, மாணவிகள் கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து சிவகங்கை மாவட்ட ஆட்சியா் பி. மதுசூதன் ரெட்டி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: அரசு மற்றும் அரசு உதவி பெறும் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் மூன்றாண்டு இளங்கலை பட்டப்படிப்பு பயிலும் மாணவ, மாணவிகளுக்கு இலவச கல்வித்திட்டத்தின் கீழ் எவ்வித நிபந்தனையுமின்றி கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது.
முதுகலை, பாலிடெக்னிக், தொழில் படிப்பு போன்ற பிற படிப்புகளுக்கு பெற்றோரது ஆண்டு வருமானம் ரூ.2 லட்சத்துக்கு மிகாமல் இருத்தல் வேண்டும். இந்த தகுதிகள் கொண்ட மாணவ, மாணவிகள் உரிய ஆவணங்களுடன் விண்ணப்பப் படிவங்களை, அவா்கள் பயிலும் கல்வி நிறுவனங்களிலேயே பெற்று விண்ணப்பிக்கலாம்.
மேலும், இதுதொடா்பான கூடுதல் விவரங்களுக்கு சிவகங்கை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் உள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சிறுபான்மையினா் நல அலுவலகத்தை அணுகி தெரிந்து கொள்ளலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.