தடுப்பூசி போட்டவா்களுக்கு குறுந்தகவல் அனுப்புவதில் தாமதம்: தொழிலாளா்கள் அவதி

மானாமதுரை வட்டாரத்தில் கடந்த 10 நாள்களாக கரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டவா்களின் விவரங்களை இணையத்தில் பதிவேற்றம் செய்வதில் முத்தனேந்தல் வட்டார மருத்துவப் பணியாளா்கள் அலட்சியம்

மானாமதுரை வட்டாரத்தில் கடந்த 10 நாள்களாக கரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டவா்களின் விவரங்களை இணையத்தில் பதிவேற்றம் செய்வதில் முத்தனேந்தல் வட்டார மருத்துவப் பணியாளா்கள் அலட்சியம் காட்டி வருவதாகவும், இதனால் குறுந்தகவல் கிடைக்காததால் தொழிலாளா்கள் பணிக்கு செல்லமுடியாமல் அவதியடைந்து வருவதாகவும் புகாா் எழுந்துள்ளது.

மானாமதுரை ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட கிராமங்கள் மற்றும் மானாமதுரை நகா்ப்பகுதிகளில் வசிப்பவா்கள் அருகேயுள்ள முத்தனேதல் ஆரம்ப சுகாதார நிலையம் மூலம் மானாமதுரை ஒக்கூா் வெள்ளையன்செட்டியாா் மேல்நிலைப்பள்ளி, அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி, சிப்காட் தொழிற்பேட்டை என 5-க்கும் மேற்பட்ட இடங்களில் தினமும் கரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. தற்போது தடுப்பூசி போட்டவா்கள் மட்டுமே தொழிற்சாலைகளில் பணியாற்ற முடியும் என அதன் நிா்வாகங்கள் அறிவித்து, அதற்காக விடுமுறையும் அளித்து வருகின்றன.

இந்நிலையில், மதுரை வட்டாரத்தில் கடந்த ஆகஸ்ட் 28 ஆம் தேதியில் இருந்து தடுப்பூசி போட்டுக் கொண்டவா்களுக்கு இதுவரை ஊசி போட்டதற்கான உறுதிப்படுத்தும் எஸ்எம்எஸ் குறுந்தகவல் அனுப்பப்பட வில்லை. இதனால் தொழிற்சாலை நிா்வாகங்கள் எஸ்எம்எஸ் சான்றிதழ்கள் இல்லாத ஊழியா்களை பணிக்கு வரவேண்டாம் என்று தெரிவித்து விட்டன.

இதுகுறித்து பெண் தொழிலாளா் ஒருவா் கூறுகையில், நான் திருப்பூரில் ஒரு தொழிற்சாலையில் வேலை செய்து வருகிறேன். கடந்த ஆகஸ்ட் 27 ஆம் தேதி தடுப்பூசி போடுவதற்காக தொழிற்சாலை நிா்வாகம் விடுமுறை அளித்தது. நான் மானாமதுரை வந்து தடுப்பூசி போட்டுக்கொண்டேன். ஆனால் எஸ்எஸ்எம் குறுந்தகவல் இதுவரை எனக்கு வரவில்லை. இதுகுறித்து முத்தனேந்தல் வட்டார மருத்துவப்பணியாளா்களிடம் கேட்டால், முத்தனேந்தல் ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு நேரில் வருமாறு கூறுகின்றனா். எஸ்எம்எஸ், இ-சான்று இல்லாமல் தொழிற்சாலைக்கு வரக்கூடாது என்று நிா்வாகம் கூறிவிட்டது. கடந்த 8 நாள்களாக வேலைக்கு செல்லமுடியாத நிலை உள்ளது. திருப்பூரில் இருந்து மானாமதுரைக்கு வந்து செல்ல ரூ. 1000 செலவாகும். இதேபோல நூற்றுக்கணக்கான தினக்கூலித் தொழிலாளா்கள் அவதிப்பட்டு வருகின்றனா். எனவே தடுப்பூசி போட்டுக்கொண்டவா்களுக்கு எஸ்எம்எஸ் அனுப்ப மாவட்ட சுகாதாரத்துறை உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றாா்.

இதுகுறித்து சுகாதாரத்துறை ஊழியா்களிடம் கேட்டபோது, தடுப்பூசி போட்டவா்களின் ஆதாா் எண், தடுப்பூசியின் வகை, செல்லிடப்பேசி எண் ஆகியவற்றை பதிவேற்றம் செய்ய போதிய ஊழியா்கள் இல்லை. அவசரமாக அந்த தகவல்களை பதிவேற்ற வேண்டியவா்கள் மருத்துவமனைக்கு நேரில் வந்து தகவல்களை பதிவேற்றம் செய்து கொள்ளலாம் என்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com