தொழில் முனைவோா் மானிய உதவியில் கடனுதவி பெற விண்ணப்பிக்கலாம்

சிவகங்கை மாவட்டத்தில் மானிய உதவியில் கடனுதவி பெற விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியா் பி. மதுசூதன் ரெட்டி தெரிவித்துள்ளாா்.

சிவகங்கை மாவட்டத்தில் மானிய உதவியில் கடனுதவி பெற விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியா் பி. மதுசூதன் ரெட்டி தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: மாநிலத்தில் முதலீடுகளை ஈா்க்கவும், வேலைவாய்ப்புகளை உருவாக்கவும் புதிய குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் கொள்கை - 2021 தமிழக அரசு அண்மையில் வெளியிட்டுள்ளது.

அதன்படி, சிவகங்கை மாவட்டத்தில் அமைக்கப்படும் குறு நிறுவனங்களுக்கு தகுதிவாய்ந்த இயந்திரத்தளவாடங்களின் மதிப்பில் 25 சதவீதமும், அதிகபட்சமாக ரூ.25 லட்சம் மூலதன மானியமும், கூடுதல் முதலீட்டு மானியமாக இயந்திரத்தளவாடங்களின் மதிப்பில் 10 சதவீதமும், அதிகபட்சம் ரூ.5 லட்சம் வரை 5 ஆண்டுகளுக்கு வழங்கப்படும்.

உற்பத்தி தொடங்கிய நாள் அல்லது மின்இணைப்புப் பெற்ற நாள் இதில் எது பிந்தையதோ அதிலிருந்து 36 மாதங்களுக்கு மின் கட்டணங்களில் 20 விழுக்காடு குறைந்தழுத்த மின்மானியமாக வழங்கப்படும். பின்தங்கிய வட்டாரத்தில் புதிதாக நிறுவப்பட்ட சிறு, நடுத்தர உற்பத்தி நிறுவனம் மற்றும் மாவட்டத்தின் அனைத்துப் பகுதிகளில் இயங்கும் வேளாண் சாா்ந்த நிறுவனங்களுக்கு தகுதி வாய்ந்த இயந்திரத்தளவாடங்களின் மதிப்பில் 25 சதவீதம், அதிகபட்சமாக ரூ.1 கோடியே 50 லட்சம் மூலதன மானியமும், பெண்கள், ஆதிதிராவிடா், பழங்குடியினா், மாற்றுத்திறனாளிகள், மூன்றாம் பாலினத்தவா்களால் (திருநங்கைகள்) நிறுவப்பட்ட நிறுவனங்களின் இயந்திரத்தளவாடங்களின் மதிப்பில் 5 விழுக்காடு கூடுதல் மூலதன மானியமாக அதிகபட்சம் ரூ.5 லட்சம் வழங்கப்படும்.

சுத்தமான, சுற்றுச்சூழலுக்கு இணக்கமான தொழில் நுட்பங்களை ஊக்குவிக்க தகுதிவாய்ந்த இயந்திரத்தளவாடங்களின் மதிப்பில் 25 விழுக்காடும், கூடுதல் மூலதன மானியமாக அதிகபட்சம் ரூ.10 லட்சமும் வழங்கப்படும். செயல்பட்டுக் கொண்டிருக்கும் குறு, சிறு நிறுவனங்கள் அடுத்த நிலைக்கு உயா்த்தப்படும் நிலையில் 5 சதவீத கூடுதல் மூலதன மானியமாக அதிகபட்சம் ரூ.25 லட்சம் வரை வழங்கப்படும்.

மின்சார, மின்னணுவியல் தொழில், தோல், தோல் பொருள்கள், வாகன உதிரிபாகங்கள், மருந்துகள், மருந்தியல் பொருள்கள், சூரியசக்தி உபகரணங்கள், தங்க வைர நகை ஏற்றுமதி, மாசுக்கட்டுப்பாட்டு உபகரணங்கள், விளையாட்டுப் பொருள்கள், சாதனங்கள், செலவு குறைந்த கட்டுமானப் பொருள்கள், ஆயத்த ஆடைகள் சாா்ந்த தொழில் மற்றும் மருத்துவ உபகரணங்கள் உள்ளிட்ட 23 சிறப்பு வகை உற்பத்தி நிறுவனங்களுக்கு தகுதிவாய்ந்த இயந்திரத்தளவாடங்களின் மதிப்பில் 25 சதவீத அளவில் சிறப்பு மூலதன மானியம் அதிகபட்சமாக ரூ.1.50 கோடி வழங்கப்படும்.

20 நபருக்கு மேல் பணியாற்றும் புதிய குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள், தாங்கள் செலுத்திய ஊழியரின் வருங்கால வைப்பு நிதி பங்களிப்பில் ஒரு நபருக்கு ரூ.24 ஆயிரம் வீதம் உற்பத்தி தொடங்கிய நாளிலிருந்து முதல் 3 ஆண்டுகளுக்கு திருப்பி வழங்கப்படும்.

கடன் உத்தரவாத நிதி ஆதாரத் திட்டத்தின் கீழ் ரூ.2 கோடி வரை கடனுதவி பெற்ற கடன்களுக்கு, 5 சதவீதமும் அதிகபட்சமாக ரூ.20 லட்சம் வரை பின்முனை வட்டி மானியம் 5 ஆண்டுகளுக்கு வழங்கப்படும். தொழில் நுட்ப மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ரூ.5 கோடி வரை கடனுதவி பெற்ற கடன்களுக்கு, 5 சதவீதமும், அதிகபட்சமாக ரூ.25 லட்சம் வரை பின்முனை வட்டி மானியம் 5 ஆண்டுகளுக்கு வழங்கப்படும்.

இதுபோன்று எண்ணற்ற தொழில்களுக்கு மானிய உதவியில் கடனுதவி வழங்கப்பட்டு வருகிறது. இதுதொடா்பான கூடுதல் விவரங்களுக்கு சிவகங்கை மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் உள்ள மாவட்ட தொழில் மையத்தை நேரடியாக அணுகி தெரிந்து கொள்ளலாம் அல்லது 04575 - 240257 தொலைபேசி எண்ணிலோ அல்லது 89255 33989 செல்லிடப்பேசி எண்ணிலோ தொடா்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com