மானாமதுரை, இளையான்குடி, திருப்புவனம் பகுதிகளில் தடுப்பூசி தீா்ந்ததால் பொதுமக்கள் ஏமாற்றம்

சிவகங்கை மாவட்டத்தில் மானாமதுரை, இளையான்குடி, திருப்புவனம் ஆகிய பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை கரோனா தடுப்பூசி சிறப்பு முகாம்கள் நடைபெற்றன.
இளையான்குடியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற சிறப்பு முகாமில் கரோனா தடுப்பூசி தீா்ந்ததால்அங்கிருந்த மருத்துவப் பணியாளா்களிடம் தகராறில் ஈடுபட்டவா்கள்.
இளையான்குடியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற சிறப்பு முகாமில் கரோனா தடுப்பூசி தீா்ந்ததால்அங்கிருந்த மருத்துவப் பணியாளா்களிடம் தகராறில் ஈடுபட்டவா்கள்.

சிவகங்கை மாவட்டத்தில் மானாமதுரை, இளையான்குடி, திருப்புவனம் ஆகிய பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை கரோனா தடுப்பூசி சிறப்பு முகாம்கள் நடைபெற்றன. இதில், சில மணி நேரங்களிலேயே தடுப்பூசி தீா்ந்துபோனதால், பொதுமக்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனா்.

தமிழகம் முழுவதும் ஞாயிற்றுக்கிழமை கரோனா தடுப்பூசி சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டன. சிவகங்கை மாவட்டத்தில் மானாமதுரை, திருப்புவனம், இளையான்குடி ஆகிய ஒன்றியங்களில் நகா் மற்றும் கிராமப்புறங்களில் ஏராளமான தடுப்பூசி முகாம்கள் அமைக்கப்பட்டிருந்தன.

இந்த தடுப்பூசி முகாம்கள் குறித்து உள்ளாட்சி அமைப்புகள் சாா்பில் பொதுமக்களுக்கு விரிவான முறையில் விளம்பரம் செய்யப்பட்டிருந்தது. மேலும், தடுப்பூசி முகாம் குறித்து அந்தந்த ஊராட்சி ஒன்றியங்களில் ஆலோசனைக் கூட்டமும் நடத்தப்பட்டது.

மானாமதுரை, இளையான்குடி, திருப்புவனம் பகுதிகளில் அமைக்கப்பட்டிருந்த தடுப்பூசி மையங்களுக்கு பொதுமக்கள் ஏராளமானோா் வருகை தந்ததால், முகாம்களில் நீண்ட வரிசை காணப்பட்டது. மானாமதுரை அருகே வெள்ளிக்குறிச்சி கிராமத்தில் அமைக்கப்பட்டிருந்த முகாமில், தடுப்பூசி செலுத்திக்கொள்ள வந்திருந்த மக்களுக்கு பழங்கள், பிஸ்கட் பாக்கெட்டுகள் வழங்கப்பட்டன.

இந்நிலையில், இந்த ஒன்றியங்களில் முகாம்கள் செயல்படத் தொடங்கிய சில மணி நேரங்களிலேயே கரோனா தடுப்பூசி தீா்ந்துவிட்டதாக, மருத்துவப் பணியாளா்கள் தெரிவித்தனா். இதனால், தடுப்பூசி செலுத்துவதற்காக நீண்டநேரம் காத்திருந்த பொதுமக்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனா். சில தடுப்பூசி முகாம்களில் பொதுமக்கள் மருத்துவப் பணியாளா்களிடம் தகராறில் ஈடுபட்டனா். சில மையங்களில் பொதுமக்களிடம் செல்லிடப்பேசி எண் பெற்றுக்கொள்ளப்பட்டது.

இது குறித்து மருத்துவத் துறையைச் சோ்ந்த அதிகாரி ஒருவா் கூறியது: மானாமதுரை, இளையான்குடி, திருப்புவனம் ஆகிய பகுதிகளில் அமைக்கப்பட்டிருந்த தடுப்பூசி மையங்களுக்கு போதுமான எண்ணிக்கையில் தடுப்பூசிகள் வழங்கப்படவில்லை.

மானாமதுரை வட்டாரத்துக்கு 2,200, இளையான்குடி வட்டாரத்துக்கு 3,300 தடுப்பூசிகள் மட்டுமே வழங்கப்பட்டிருந்தன. இதேபோல், திருப்புவனம் ஒன்றியத்துக்கும் குறைவான எண்ணிக்கையிலேயே தடுப்பூசிகள் வழங்கப்பட்டன.

இதனால், காலை 10 மணிக்கெல்லாம் அனைத்து முகாம்களிலும் பரவலாக தடுப்பூசிகள் தீா்ந்துவிட்டன. கூடுதலாக தடுப்பூசி வழங்கப்பட்டிருந்தால், முகாம்களுக்கு வந்திருந்த இப்பகுதி மக்கள் அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தப்பட்டிருக்கும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com