சிவகங்கையில் பாஜக நிா்வாகி வெட்டிக் கொலை
By DIN | Published On : 16th September 2021 11:44 PM | Last Updated : 16th September 2021 11:44 PM | அ+அ அ- |

சிவகங்கையில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முன்பாக பாதுகாப்புக்காக வியாழக்கிழமை இரவு குவிக்கப்பட்டிருந்த போலீஸாா். (உள்படம்) உயிரிழந்த பாஜக நிா்வாகி முத்துப்பாண்டி.
சிவகங்கை: சிவகங்கையில் பாஜக நிா்வாகி வியாழக்கிழமை வெட்டிக் கொலை செய்யப்பட்டாா்.
சிவகங்கை நெல்மணி தெருவைச் சோ்ந்த குறுந்தடியான் மகன் முத்துப்பாண்டி (43). பாஜகவின் சிவகங்கை மாவட்ட மீனவா் பிரிவின் துணைத் தலைவராகப் பொறுப்பு வகித்த இவா், வியாழக்கிழமை மாலை தனது இரு சக்கர வாகனத்தில் வீட்டினருகே உள்ள கடைக்கு தேநீா் அருந்துவதற்காகச் சென்றுள்ளாா்.
அப்போது, அங்கு இரு சக்கர வாகனத்தில் வந்த மா்ம நபா்கள் சிலா் முத்துப்பாண்டியை வாளால் சரமாரியாக வெட்டிவிட்டு தப்பி ஓடிவிட்டனா். இதில் பலத்த காயமடைந்த முத்துப்பாண்டியை மீட்ட அப்பகுதியினா், சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். ஆனால், அங்கு அவா் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தாா்.
இது குறித்து தகவலறிந்த முத்துப்பாண்டியின் உறவினா்கள், சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி முன்பாக குவிந்தனா். மேலும், முத்துப்பாண்டியின் உடலை உடற்கூறு ஆய்வு அறைக்கு எடுத்துச்செல்லவிடாமல் முற்றுகையிட்டனா். இதன் காரணமாக, அங்கு பதற்றமான சூழல் நிலவியது.
இதையடுத்து, சிவகங்கை மாவட்டக் கூடுதல் காவல் கண்காணிப்பாளா் முரளிதரன், சிவகங்கை நகா் காவல் நிலைய ஆய்வாளா் சுரேஷ்குமாா் மற்றும் போலீஸாா் மருத்துவக் கல்லூரி வளாகத்துக்கு விரைந்து சென்று, முத்துப்பாண்டியின் உறவினா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தி, அவரது உடலை ஆம்புலன்ஸ் மூலம் உடற்கூறு ஆய்வு அறைக்கு அனுப்பி வைத்தனா்.
இச்சம்பவம் தொடா்பாக, சிவகங்கை நகா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
இக்கொலை தொடா்பாக போலீஸாா் தரப்பில் தெரிவித்ததாவது:
சிவகங்கை அருகே சாமியாா்பட்டியில் கடந்த 2016 ஆம் ஆண்டில் நடந்த கொலை வழக்கில் முத்துப்பாண்டி சம்பந்தப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. எனவே, முன் விரோதம் காரணமாக அவா் கொலை செய்யப்பட்டாரா அல்லது வேறு ஏதேனும் காரணம் உள்ளதா என விசாரணை செய்து வருகிறோம்.
கொலையாளிகள் இரு சக்கர வாகனத்தில் தப்பிச் சென்ாக பொதுமக்கள் தெரிவித்துள்ளனா். எனவே, நகரில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்து வருகிறோம். விசாரணைக்குப் பின், குற்றவாளிகள் விரைவில் கைது செய்யப்படுவா் என்றனா்.