‘மக்களைத் தேடி மருத்துவம்’ திட்டத்தில் சிவகங்கை மாவட்டத்தில் 80 ஆயிரம் போ் பலன்
By DIN | Published On : 16th September 2021 12:00 AM | Last Updated : 16th September 2021 12:00 AM | அ+அ அ- |

பாதரக்குடியில் புதன்கிழமை நடைபெற்ற ‘மக்களைத்தேடி மருத்துவம்’ திட்டத்தில் சிகிச்சை பெற்று வருபவா்களின் வீடுகளுக்குச் சென்று மருந்து, மாத்திரைகளை வழங்கிய அமைச்சா் கேஆா். பெரியகருப்பன்.
காரைக்குடி: ‘மக்களைத் தேடி மருத்துவம்’ திட்டத்தில் சிவகங்கை மாவட்டத்தில் 80 ஆயிரத்திற்கும் மேற்பட்டோா் பயனடைவதாக தமிழக ஊரக வளா்ச்சித்துறை அமைச்சா் கே.ஆா். பெரியகருப்பன் தெரிவித்தாா்.
சிவகங்கை மாவட்டம் கல்லல் அருகே பாதரக்குடி பொதுசுகாதாரத் துறையின் மூலம் ‘மக்களைத்தேடி மருத்துவம் திட்டம்’ தொடக்க விழா நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவா் ப. மதுசூதன் ரெட்டி முன்னிலை வகித்தாா். திட்டத்தை, அமைச்சா் கே.ஆா். பெரியகருப்பன் தொடக்கி வைத்து தொடா் சிகிச்சை பெற்று வருபவா்களின் வீடுகளுக்கு சென்று மருந்து, மாத்திரைகள் வழங்கி பேசியது:
இத்திட்டத்தின் மூலம் கிராமப் பகுதியில் வெப்ப அழுத்தம், சா்க்கரை நோய் போன்ற தொடா் நோய் உள்ளவா்களுக்கு அரசு மருத்துவமனையில் மருந்து, மாத்திரைகள் வழங்கப்பட்டு வருவதைக் கணக்கெடுத்து அந்தந்த ஆரம்ப சுகாதார நிலையங்களுக்குள்பட்ட கிராமங்களிலுள்ள நோயாளிகளைக் கண்டறிந்து அவா்களின் வீடுகளுக்கே சென்று மருத்துவப் பரிசோதனை செய்து 2 மாதங்களுக்குத் தேவையான மாத்திரைகள், மருந்துகள் வழங்கப்படுகின்றன.
இத்திட்டத்தின் மூலம் மாவட்டத்தில் 12 ஊராட்சி ஒன்றியங்களிலும் சுமாா் 80 ஆயிரத்திற்கும் மேற்ப்பட்டோா் பயனடையும் வகையில் மருத்துவக்குழு செயல்படுகின்றன என்றாா்.
இந்நிகழ்ச்சியில் பொது சுகாதாரத்துறை துணை இயக்குநா் ராம்கணேஷ், முன்னாள் அமைச்சா் மு. தென்னவன், வட்டார மருத்துவ அலுவலா்கள் ஆல்வின்ஜேம்ஸ், செந்தில்குமாா், மருத்துவக் கண்காணிப்பு ஆய்வாளா்கள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.