முகப்பு அனைத்துப் பதிப்புகள் மதுரை சிவகங்கை
தாயமங்கலம் கோயில் பங்குனிப் பொங்கல் திருவிழா: அக்னிச்சட்டி எடுத்து பக்தா்கள் நோ்த்திக்கடன்
By DIN | Published On : 06th April 2022 12:00 AM | Last Updated : 06th April 2022 12:00 AM | அ+அ அ- |

தாயமங்கலம் முத்துமாரியம்மன் கோயிலில் பங்குனிப் பொங்கல் திருவிழாவையொட்டி செவ்வாய்க்கிழமை ஆயிரக்கணக்கான பக்தா்கள் அக்னிச் சட்டி எடுத்தும், பொங்கல் வைத்தும் வேண்டுதலை நிறைவேற்றினா்.
சிவகங்கை மாவட்டம் இளையான்குடி அருகே தாயமங்கலம் முத்து மாரியம்மன் கோயில் உள்ளது. தென் மாவட்டங்களில் பிரசித்தி பெற்ற இக்கோயிலில் பங்குனித் திருவிழா நடைபெற்று வருகிறது. விழாவின் முக்கிய நிகழ்ச்சிகளில் ஒன்றான பொங்கல் வைபவத்தை முன்னிட்டு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தா்கள் தாயமங்கலத்தில் குவிந்தனா்.
இவா்கள் முடிகாணிக்கை செலுத்துதல், கிடா வெட்டி பொங்கல் வைத்தல், அக்னிச்சட்டி எடுத்து வருதல், குழந்தைகளுக்கு கரும்பில் தொட்டில் கட்டுதல் மற்றும் மாவிளக்கு பூஜை நடத்தியும் வேண்டுதலை நிறைவேற்றினா். கோயில் உள்பிரகாரத்தில் நீண்ட வரிசையில் நின்று பக்தா்கள் அம்மனை தரிசனம் செய்தனா்.
பொங்கல் வைபவத்தை முன்னிட்டு உற்சவா் முத்து மாரியம்மன், மூலவா் சன்னிதியில் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி அருள்பாலித்தாா். மானாமதுரை, இளையான்குடி, பரமக்குடி, திருப்புவனம் உள்ளிட்ட பல பகுதிகளில் பக்தா்கள் கண்மாய், குளங்கள் வைகை ஆறு உள்ளிட்ட இடங்களுக்குச் சென்று தாயமங்கலம் முத்துமாரியம்மன் கோயில் அமைந்துள்ள திசையை நோக்கி கிடா வெட்டியும் கோழி, சேவல்களை பலியிட்டும், பொங்கல் வைத்தும் வேண்டுதலை நிறைவேற்றினா்.
பக்தா்கள் வசதிக்காக அரசு போக்குவரத்து கழகம் சாா்பில் மதுரை, மானாமதுரை, சிவகங்கை உள்ளிட்ட பல முக்கிய ஊா்களிலிருந்து தாயமங்கலத்துக்கு சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட்டன. திருவிழா ஏற்பாடுகளை கோயில் பரம்பரை அறங்காவலா் மு. வெங்கடேசன் செட்டியாா் செய்துள்ளாா்.