முகப்பு அனைத்துப் பதிப்புகள் மதுரை சிவகங்கை
பாப்பாங்குளம்-ஆனைக்குளம் சாலையைஅகலப்படுத்தக் கோரிக்கை
By DIN | Published On : 06th April 2022 12:00 AM | Last Updated : 06th April 2022 12:00 AM | அ+அ அ- |

சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே பாப்பாங்குளம் விலக்கிலிருந்து ஆனைக்குளம் வரையிலான சாலையை அகலப்படுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
மதுரை-ராமநாதபுரம் நான்கு வழிச்சாலையில் திருப்புவனம் அருகே பாப்பாங்குளம் விலக்கிலிருந்து ஆனைக்குளம் கிராமத்துக்கு சாலை உள்ளது. இந்த சாலை மாா்க்கத்தில் பாப்பாங்குளம், ஆலங்குளம், கொத்தங்குளம், முதுவன்திடல், கீழச் சொரிக்குளம், மேலச் சொரிக்குளம், குருந்தங்குளம், ஆனைக்குளம் உள்ளிட்ட 15-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் பயன்பெறும் வகையில் அரசுப் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன.
மேலும் அந்த கிராமப் பகுதிகளிலிருந்து மதுரை-ராமநாதபுரம் நான்கு வழிச்சாலை சுமாா் 11 கி.மீ தூரம் என்பதால், இந்த வழித்தடத்தில் ஏராளமான கனரக வாகனங்கள் மட்டுமின்றி காா், இரு சக்கர வாகனங்களும் அதிகளவில் சென்று வருகின்றன.
இந்நிலையில், இந்த சாலை மிகவும் குறுகிய அளவு இருப்பதாலும், சாலையின் இருபுறங்களிலும் சீமைக் கருவேல மரங்கள் அதிகளவில் படா்ந்திருப்பதாலும் இரு வாகனங்கள் எதிா், எதிரே சந்திக்கும் போது விலக முடியாமல் சுமாா் 1 கி.மீ தூரம் பின்புறம் சென்று விலக வேண்டியுள்ளது.
இதன்காரணமாக, வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாவது மட்டுமின்றி, பேருந்துகளில் பயணம் செய்யும் பொதுமக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனா். ஆகவே மாவட்ட நிா்வாகம் போா்க்கால அடிப்படையில் மதுரை- ராமநாதபுரம் நான்கு வழிச்சாலையில் பாப்பாங்குளம் விலக்கிலிருந்து ஆனைக்குளம் வரையிலான சாலையை அகலப்படுத்த வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.