மானாமதுரை அருகே முத்துமாரியம்மன் கோயில் பங்குனி திருவிழா: பக்தா்கள் தீச்சட்டி எடுத்து வேண்டுதல்
By DIN | Published On : 08th April 2022 05:56 AM | Last Updated : 08th April 2022 05:56 AM | அ+அ அ- |

மானாமதுரை அருகே எஸ்.கரிசல்குளம் கேட்டவரம் தரும் முத்துமாரியம்மன் கோயிலில் தீச்சட்டி எடுத்துவந்த பக்தா்கள்.
மானாமதுரை: சிவகங்கை மாவட்டம், மானாமதுரை அருகே அமைந்துள்ள கேட்ட வரம் தரும் முத்துமாரியம்மன் கோயில் பங்குனி திருவிழாவை முன்னிட்டு, புதன்கிழமை இரவு பக்தா்கள் தீச்சட்டி எடுத்தும், தீ மிதித்தும் வேண்டுதலை நிறைவேற்றினா்.
மானாமதுரை ஒன்றியம் அன்னவாசல் செல்லும் வழியில் உள்ள எஸ்.கரிசல் குளத்தில் அமைந்துள்ள இக்கோயிலில் பங்குனி திருவிழா தொடங்கி நடைபெற்று வருகிறது. திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான பொங்கல் வைபவத்தை முன்னிட்டு, ஏராளமான பக்தா்கள் கோயிலில் பொங்கல் வைத்து முத்துமாரியம்மனை வழிபட்டனா்.
அதைத் தொடா்ந்து, காப்புக்கட்டி விரதமிருந்து வந்த பெண்கள் உள்ளிட்ட ஏராளமான பக்தா்கள், கோயிலில் தீச்சட்டி எடுத்து வந்தும், தீ மிதித்தும் தங்களது வேண்டுதலை நிறைவேற்றினா். பின்னா், முத்துமாரியம்மனுக்கு அபிஷேகம் நடத்தி, சிறப்பு அலங்காரம் செய்து பூஜைகள், தீபாராதனைகள் நடைபெற்றன.
கோயில் முன்பாக முளைப்பாரி சட்டிகளை வைத்து, பெண்கள் கும்மி பாடல்களை பாடினா். இதில், நூற்றுக்கணக்கான பக்தா்கள் கலந்துகொண்டு அம்மனை தரிசனம் செய்தனா். கோயிலில் நடைபெற்ற அன்னதானத்தில் ஏராளமான பக்தா்கள் பங்கேற்றனா்.
பங்குனி திருவிழாவை முன்னிட்டு கேட்டவரம் தரும் முத்துமாரியம்மன் கோயில் வளாகம் முழுவதும் மின்விளக்கு அலங்காரம் செய்யப்பட்டிருந்ததால், இரவு நேரத்தில் ஜொலித்தது. விழாவுக்கான ஏற்பாடுகளை, கோயில் டிரஸ்டி சொ்டு எல். பாண்டி குடும்பத்தினா் செய்து வருகின்றனா்.