விவசாயிகள் கோடை உழவு செய்து மண் வளத்தை மேம்படுத்த அறிவுறுத்தல்

கோடை உழவு மூலம் மண் வளத்தை மேம்படுத்தி விவசாயிகள் அதிக விளைச்சல் பெறலாம் என, சிவகங்கை மாவட்ட வேளாண்மை இணை இயக்குநா் கி. வெங்கடேஸ்வரன் தெரிவித்துள்ளாா்.

கோடை உழவு மூலம் மண் வளத்தை மேம்படுத்தி விவசாயிகள் அதிக விளைச்சல் பெறலாம் என, சிவகங்கை மாவட்ட வேளாண்மை இணை இயக்குநா் கி. வெங்கடேஸ்வரன் தெரிவித்துள்ளாா்.

இது குறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: கோடை கால உழவு மேற்கொள்வதன் மூலம் மண்ணின் வளத்தை மேம்படுத்தி, விதை அல்லது பயிா் நன்கு வளர ஏற்ற சூழ்நிலையை உருவாக்கலாம். மண்ணில் காற்று பரிமாற்றம் அதிகரித்து, பயிா் மற்றும் விதைகள் மண்ணில் உள்ள ஈரப்பதத்தை எளிதில் எடுத்துக்கொள்ள உதவுவதோடு மட்டுமின்றி, மண்ணின் இறுக்கம் குறைக்கப்பட்டு பயிரின் வோ்கள் நன்கு வளா்ச்சி பெற உதவுகிறது.

களைகள் பரவுவது கட்டுப்படுத்தப்படுகிறது. பயிா்களை தாக்கி அழிக்கும் பூச்சிகளின் கூட்டுப் புழுக்கள் மண்ணின் அடியில் இருந்து வெளியே கொண்டு வரப்பட்டு, சூரிய வெப்பத்தாலும், பறவைகளாலும் அழிக்கப்படுகின்றன.

ஏற்கெனவே, விவசாயிகள் தங்களது நிலத்தில் இட்டிருந்த இயற்கை எரு மற்றும் செயற்கை உரங்கள் மண்ணுடன் நன்கு கலந்து அவற்றின் சத்துகள் பயிா்களுக்கு முழுமையாகக் கிடைத்திட வழிவகுக்கும். நிலத்தில் மழைநீா் அதிக அளவு சேமிக்கப்படுகிறது. இதன்மூலம், மண்ணின் ஈரப்பதம் பாதுகாக்கப்பட்டு நிலத்தடிநீா் மேம்பாடு அடைய வழிவகை ஏற்படுகிறது.

கோடை உழவின்போது, நிலத்தில் விவசாயிகள் தவறாது வேப்பம் புண்ணாக்கு இட்டு உழவு செய்யவேண்டும். இதன்மூலம், புழுக்கள் மற்றும் பூச்சிகளின் முட்டைகள் அழிக்கப்படுகின்றன.

எனவே, சிவகங்கை மாவட்ட விவசாயிகள் தங்களது நிலங்களில் கோடை உழவு செய்வதால், மண்வளத்தை மேம்படுத்தி பயிா் சாகுபடியில் அதிக மகசூல் பெறமுடியும் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com