தனித்திறன் மேம்பாட்டுப் பயிற்சிகள் மாணவர்களுக்கு அளிக்கப்படும்:  அழகப்பா பல்கலை. துணைவேந்தர் 

தனித்திறன் மேம்பாட்டுப் பயிற்சிகள்  மாணவர்களுக்கு அளிக்கப்படும் என்று அழகப்பா பல்கலைக்கழக புதிய துணைவேந்தர் க.ரவி தெரிவித்துள்ளார்.
புதிய துணைவேந்தர் க.ரவி
புதிய துணைவேந்தர் க.ரவி

காரைக்குடி: வேலைவாய்ப்பு வழங்கும் நிறுவனங்கள் எதிர்பார்க்கும் தனித்திறன்களை வளர்த்துக் கொள்ளும் வகையில் தனித்திறன் மேம்பாட்டுப் பயிற்சிகள்  மாணவர்களுக்கு அளிக்கப்படும் என்று அழகப்பா பல்கலைக்கழக புதிய துணைவேந்தர் க.ரவி தெரிவித்துள்ளார்.

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தின் 11- வது துணைவேந்தராக திங்கள்கிழமை முற்பகலில் பொறுப்பேற்றுக் கொண்டார். இந்நாளிலிருந்து மூன்றாண்டுகள் துணைவேந்தராக பதவி வகிப்பார். அவருக்கு பேராசிரியர்கள், அலுவலர்கள் சார்பில் வரவேற்பளிக்கப்பட்டது. குன்றக்குடி பொன்னம்பல அடிகளார், நகரின் முக்கியப் பிரமுகர்களும் நேரில் வாழ்த்துத் தெரிவித்தனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய துணைவேந்தர் க. ரவி கூறியதாவது: 

இப்பல்கலைக்கழகத்தின் அனைத்துச் செயல்பாடுகளிலும் நேர்மையான, அனைத்தையும் உள்ளடக்கிய மற்றும் வெளிப்படையான நிர்வாகம் கடைபிடிக்கப்படும். 

மேலும் பல்கலைக்கழகத்தின் நிதி நிலையை மேம்படுத்தும் பொருட்டு அதற்கான முயற்சிகள் தொடர்ந்து மேற்கொள்ளப்படும்.

முக்கியமாக தேசிய தர நிர்ணயக் குழு (நாக் குழு), இந்தப் பல்கலைக்கழகத்தின் நான்காம் சுற்று மதிப்பீடு செய்ய உள்ளது. இதில் அதிக புள்ளிகள் (அதாவது 3.80/4.00) பெறுவதற்கு ஆசிரியர்கள், மாணவர்கள் ஒத்துழைப்போடு அனைத்துச் செயல்பாடுகளும் நடைபெறுவதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என்றார்.

புதிய துணைவேந்தர் க.ரவி கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகேயுள்ள சாக்காங்குடி என்ற கிராமத்தைச் சேர்ந்தவர். இவரது மனைவி ஆர்.பானு பி.எஸ்சி., பி.எட்., ஆசிரிய பட்டதாரியாவார். இவர்களின் மகள் அபிநயா, மகன் அரவிந்தன் ஆகியோர் மருத்துவம் பயின்று வருகின்றனர்.

பேராசிரியர் க.ரவி 1995-ஆம் ஆண்டு அழகப்பா பல்கலைக்கழக இயற்பியல் துறையில் விரிவுரையாளராக பணியில் சேர்ந்து தற்போது இயற்பியல் துறைத் தலைவராக இருந்து வருகிறார்.

இவர் கற்பித்தல் மற்றும் ஆராய்ச்சியில் 27 ஆண்டுகள் சிறந்த அனுபவம் பெற்றவர். அதோடு 7 ஆண்டுகள் நிர்வாகப் பணி அனுபவமும் இவருக்கு உண்டு. ரூ.1.54 கோடியில் 8 ஆராய்ச்சி திட்டங்களை செயல்படுத்தியுள்ளார். 400-க்கும் மேற்பட்ட ஆராய்ச்சிக் கட்டுரைகளை ஸ்கோபஸ் இன்டெக்ஸ்டு இதழ்களில் வெளியிட்டுள்ளார். மேலும் 8 ஆராய்ச்சி காப்புரிமைகளையும் பெற்றுள்ளார். மேலும் கல்வி மற்றும் ஆராய்ச்சி தரத்தை மேம்படுத்துவதற்காக 23 வெளிநாடுகளுக்கு சென்றுள்ளார்.

தேசிய மற்றும் சர்வதேச அளவில் 22 விருதுகளை பெற்றுள்ளார். இவரது வழிகாட்டுதலில் 25 மாணவர்கள் பி.எச்டி பட்டமும், 49 மாணவர்கள் எம்.பில் பட்டமும் பெற்றுள்ளனர். அழகப்பா பல்கலைக்கழகத்திலிருந்து இயற்பியலில் அறிவியல் முதுமுனைவர் பட்டம் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இப்பேட்டியின் போது பல்கலைக்கழகத்தின் ஆட்சிக்குழு உறுப்பினர்கள், பதிவாளர் (பொறுப்பு) ராஜமோகன், தேர்வாணையர் (பொறுப்பு) கண்ணபிரான், நிதி அலுவலர் ஆர். பாண்டியன் மற்றும் பேராசிரியர்கள, அலுவலர்கள் உடனிருந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com