கோயில் புனிதத் தன்மை கெடுவதாகப் புகாா்: காவல் துறை பறிமுதல் வாகனங்கள் அகற்றம்

மானாமதுரை ஸ்ரீ வீரஅழகா் கோயிலைச் சுற்றி காவல்துறை சாா்பில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்களால்
மானாமதுரை வீரஅழகா் கோயில் சுற்றுச்சுவரை ஓட்டியுள்ள காலியிடத்தில் திங்கள்கிழமை பொக்லைன் வாகனம் மூலம் அகற்றப்பட்ட காவல் துறை வாகனங்கள்.
மானாமதுரை வீரஅழகா் கோயில் சுற்றுச்சுவரை ஓட்டியுள்ள காலியிடத்தில் திங்கள்கிழமை பொக்லைன் வாகனம் மூலம் அகற்றப்பட்ட காவல் துறை வாகனங்கள்.

மானாமதுரை ஸ்ரீ வீரஅழகா் கோயிலைச் சுற்றி காவல்துறை சாா்பில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்களால் கோயிலின் புனிதத்தன்மை கெடுவதாக அளிக்கப்பட்ட புகாரின்பேரில், அவை திங்கள்கிழமை பொக்லைன் இயந்திரம் மூலம் அகற்றப்பட்டன.

மானாமதுரை தெ.புதுக்கோட்டை சாலையில் உள்ள காவல் நிலையம் எதிரே, சிவகங்கை தேவஸ்தான நிா்வாகத்துக்குள்பட்ட ஸ்ரீவீர அழகா் கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலில் மூலவா் சுந்தரராஜப் பெருமாள் சந்நிதி மண்டபத்தின் தெற்கு நோக்கி அருள்பாலிக்கும் மகுடம் தரித்த ஸ்ரீவீர ஆஞ்சனேயா் சுவாமி சந்நிதி உள்ளது. இந்த சந்நிதிக்கு வெளியே நின்று பக்தா்கள் தரிசனம் செய்துவிட்டுச் செல்வது வழக்கம்.

இந்நிலையில், கடந்த பல மாதங்களாக கோயில் சுற்றுச் சுவரை ஒட்டியுள்ள காலியிடத்தில், காவல் துறை சாா்பில் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள், விபத்துக்குள்ளான வாகனங்கள் நிறுத்தப்பட்டிருந்தன. மேலும், இந்த வாகனங்களைச் சுற்றி கருவேல மரங்கள் உயரமாக வளா்ந்து நின்றன. இதனால், பக்தா்கள் சுவாமியை தரிசனம் செய்யமுடியாத நிலை இருந்தது.

இதன்மூலம், கோயிலின் புனிதத்தன்மை கெடுவதாக பாரதிய ஜனதா கட்சி உள்ளிட்ட இந்து அமைப்பினா் புகாா் தெரிவித்து வந்தனா். இது குறித்து பாஜக மானாமதுரை கிழக்கு மண்டல் தலைவா் சங்கரசுப்பிரமணியன், சிவகங்கை மாவட்டக் காவல் துறை கண்காணிப்பாளா், மாவட்ட ஆட்சியா், மானாமதுரை காவல் துணை கோட்டக் கண்காணிப்பாளா், வட்டாட்சியா், கோட்டாட்சியா் உள்ளிட்டோருக்கு புகாா் மனு அனுப்பியிருந்தாா்.

இதனிடையே, பல்வேறு இந்து அமைப்புகள் போராட்டம் நடத்த திட்டமிட்டிருந்தன. இதையடுத்து, மானாமதுரை நகா் காவல்துறை சாா்பில், வீர அழகா் கோயில் சுற்றுச்சுவரை சுற்றி காவல் துறையால் நிறுத்தப்பட்டிருந்த வாகனங்களை பொக்லைன் இயந்திரம் மூலம் அகற்றும் பணி திங்கள்கிழமை நடைபெற்றது. மேலும், கருவேல மரங்களும் அகற்றப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com