மானாமதுரை குடிநீர் திட்டத்தில் பழுது: விநியோகம் பாதிப்பு, மக்கள் அவதி
By DIN | Published On : 24th January 2022 12:34 PM | Last Updated : 24th January 2022 01:06 PM | அ+அ அ- |

குடிநீர் திட்ட மேல்நிலைத் தொட்டியிலிருந்து குடிநீர் செல்லும் பாதையில் பொருத்தப்பட்டுள்ள பழுதான வால்வ் வழியாக தண்ணீர் வெளியேறி வீணாகி வருகிறது.
மானாமதுரை நகர் குடிநீர் திட்டத்தில் ஏற்பட்ட பழுது காரணமாக நகரில் பல வார்டுகளில் கடந்த மூன்று நாட்களாக குடிநீர் சப்ளை செய்ய முடியாத நிலையில் பொது மக்கள் குடிநீருக்காக அவதிப்படடு வருகின்றனர்.
சிவகங்கை மாவட்டம், மானாமதுரை நகர் குடிநீர் திட்டம் அருகேயுள்ள ராஜகம்பீரம் வைகை ஆற்றுக்குள் செயல்படுகிறது. இங்கிருந்து குழாய்கள் மூலம் கொண்டு வரப்படும் தண்ணீர் மானாமதுரை நகர் பகுதியில் உள்ள பல மேல்நிலை தொட்டிகளில் ஏற்றப்பட்டு அதன் பின்னர் குழாய் இணைப்புகளுக்கு வினியோகம் செய்யப்படுகிறது. இந்நிலையில் மானாமதுரை காந்தி சிலை பின்புறம் உள்ள மேல்நிலைத்தொட்டி அண்ணாசிலை அருகே உள்ள மேல்நிலை தொட்டியில் இருந்து குழாய் இணைப்புகளுக்கு தண்ணீர் செல்லும் குழாயில் பொருத்தப்பட்டுள்ள வாழ்வுகள் பழுதாகி குடிநீர் வெளியேறி வீணாகி வந்தது.
மானாமதுரை காந்தி சிலை அருகே உள்ள குடிநீர் திட்ட மேல்நிலை தொட்டி.
இதையடுத்து ராஜகம்பீரம் குடிநீர் திட்டத்திலிருந்து மேற்கண்ட மேல்நிலை தொட்டிகளுக்கு குடிநீர் ஏற்றப்படுவது நிறுத்தப்பட்டது. இதனால் இந்த மேல்நிலைத் தொட்டிகளிலிருந்து குடிநீர் சப்ளை செய்யப்பட்ட பல வார்டுகளில் குடிநீர் சப்ளை செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக இப்பகுதி பொதுமக்கள் அவதியடைந்துள்ளனர். நகரில் ஏராளமான குடும்பத்தினர் விலை கொடுத்து குடிநீர் வாங்கி பயன்படுத்தி வருகின்றனர். தற்போது நகராட்சி நிர்வாகம் சார்பில் பழுதடைந்த குடிநீர் திட்ட வாழ்வுகளை மாற்றிவிட்டு புதிய வாழ்வுகள் பொருத்தும் பணி நடந்து வருகிறது.
விரைவில் இப் பணி முடிந்து வழக்கம் போல் மானாமதுரை நகரில் குடிநீர் வினியோகம் தொடங்கும் என நகராட்சி துறையினர் தெரிவித்தனர்.