தஞ்சாக்கூர் சுப்பிரமணியர், ஜெயம் பெருமாள் கோயில்களில் மண்டலாபிஷேகம்

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை ஒன்றியம் தஞ்சாக்கூரில் அமைந்துள்ள ஸ்ரீ சுப்பிரமணியர் கோயில், ஜெயம் பெருமாள் கோயில், திரிபுர சுந்தரி சமேத ஜெகதீஸ்வரர் கோயிலில் மண்டலாபிஷேக விழா நடைபெற்றது.
மானாமதுரை அருகே தஞ்சாக்கூரில் சுப்பிரமணியர் கோயிலில் மண்டலாபிஷேகம் மற்றும் முளைப்பாரி உற்சவ விழா நடைபெற்றது.
மானாமதுரை அருகே தஞ்சாக்கூரில் சுப்பிரமணியர் கோயிலில் மண்டலாபிஷேகம் மற்றும் முளைப்பாரி உற்சவ விழா நடைபெற்றது.

மானாமதுரை: சிவகங்கை மாவட்டம் மானாமதுரை ஒன்றியம் தஞ்சாக்கூரில் அமைந்துள்ள ஸ்ரீ சுப்பிரமணியர் கோயில், ஜெயம் பெருமாள் கோயில், திரிபுர சுந்தரி சமேத ஜெகதீஸ்வரர் கோயிலில் மண்டலாபிஷேக விழா மற்றும் முளைப்பாரி உற்சவ விழா நடைபெற்றது.

சுப்பிரமணியர் கோயிலில் 18 சித்தர்களுக்கும் சுவாமி ஐயப்பனுக்கும் தனித்தனி சன்னதிகள் அமைக்கப்பட்டுள்ளன. ஜெயம் பெருமாள் கோயிலில் பெருமாளின் 10 அவதாரங்களும் சன்னதி உருவாக்கப்பட்டுள்ளது. மேற்கண்ட  மூன்று கோயில்களுக்கும் கடந்த 48 நாட்களுக்கு முன்பு அடுத்தடுத்த நாட்களில் குடமுழுக்கு விழா நடத்தப்பட்டது. மண்டலாபிஷேக விழாவை முன்னிட்டு  கடந்த 8 நாட்களுக்கு முன்பு இக்கோயில்களில் மண்டலாபிஷேக விழாவிற்கான பூஜைகள் தொடங்கின.

அப்போது தஞ்சாக்கூரைச்  சேர்ந்த ஏராளமான பெண்கள் விரதம் தொடங்கி சுப்ரமணியர் கோயிலில் முளைப்பாரி வளர்த்தனர். விழா நாட்களில் தினமும் சுப்பிரமணியருக்கும் முளைப்பாரிச் சட்டிகளுக்கும் சிறப்பு பூஜைகள் நடந்து வந்தது. மண்டலாபிஷேக விழா நிறைவாக சுப்பிரமணியர், ஜெயம் பெருமாள், ஜெகதீஸ்வரர் கோயிலில் புனித நீர் கலசங்கள் வைத்து யாகம் வளர்க்கப்பட்டது. யாகத்தின் நிறைவாக பூர்ணாஹுதி முடிந்து இக்கோயில்களில் உள்ள மூலவர்களுக்கும் மற்றும் பரிவார தெய்வங்களுக்கும் அபிஷேகம் நடத்தி சிறப்பு அலங்காரம் செய்து பூஜைகள் தீபாராதனைகள் நடைபெற்றன. சுப்பிரமணியர் கோயில் தெப்பக்குளத்தில் ஒன்றாக அமைந்துள்ள ராகு, கேது தெய்வங்களுக்கும் சிறப்பு பூஜைகள் நடந்தது.

விழாவில் திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர். மண்டலபூஜை விழாக்களின் போது கோயிலில் நடைபெற்ற அன்னதானத்தை காரைக்குடி கிப்ட் பொறியியல் கல்லூரித் தலைவர் ஐயப்பன் தொடங்கி வைத்தார்.

முளைப்பாரி கரைப்பு உற்சவத்தை முன்னிட்டு விரதமிருந்து முளைப்பாரி வளர்த்து வந்த பெண்கள் சுப்பிரமணியர் கோயிலில் கூடி முளைப்பாரி சட்டிகளை வைத்து கும்மி கொட்டிப் பாடி முளைப்பாரி சட்டிகளை சுற்றி வந்தனர்.

தெப்பக்குளத்தில் உற்சவர் சுப்பிரமணியர் எழுந்தருளியதும்  பெண்கள் முளைப்பாரிகளை தெப்பக்குளத்தில் கரைத்தனர். மண்டலாபிஷேக விழாவை முன்னிட்டு விழா நாட்களில் சுப்பிரமணியர், பெருமாள்,  ஜெகதீஸ்வரர் கோயில்கள் இரவு நேரத்தில் மின்விளக்கு அலங்காரத்தில் ஜொலித்தது.

விழாவிற்கான ஏற்பாடுகளை கோயில் நிர்வாகியும் சமூக ஆர்வலருமான பாலசுப்பிரமணியன் தலைமையில் விழா குழுவைச் சேர்ந்த சகலகுருநாதன், பாலசக்திவேல் உள்ளிட்டோர்  செய்திருந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com