முகப்பு அனைத்துப் பதிப்புகள் மதுரை சிவகங்கை
மானாமதுரை நகராட்சியில் தனித்து களமிறங்கும் காங்கிரஸ்
By DIN | Published On : 28th January 2022 02:20 PM | Last Updated : 28th January 2022 02:21 PM | அ+அ அ- |

திமுக கூட்டணியில் தனித்து களமிறங்க முடிவு செய்துள்ள காங்கிரஸ் கட்சியினர் வாக்காளர்களை சந்தித்து வாக்கு சேகரித்து பிரச்சாரத்தை தொடங்கினர்.
மானாமதுரை: தரம் உயர்த்தப்பட்ட சிவகங்கை மாவட்டம் மானாமதுரை நகராட்சியில் வார்டு உறுப்பினர் பதவிகளுக்கு திமுக கூட்டணியில் கேட்ட இடங்கள் கிடைக்காததால் காங்கிரஸ் கட்சி பல வார்டுகளில் தனித்து களமிறங்க முடிவு செய்து அக்கட்சியினர் பிரச்சாரத்தை தொடங்கியுள்ளனர்.
பேரூராட்சியாக இருந்த மானாமதுரை கடந்த ஆண்டு நகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டு முதல் முறையாக நகராட்சி அந்தஸ்தில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலை சந்திக்கிறது. தலைவர் பதவியை கைப்பற்ற ஆளும் திமுகவினரும் ஆண்ட அதிமுகவினரும் முனைப்பு காட்டி வருகின்றனர்.
திமுக கூட்டணியில் மானாமதுரை நகராட்சியில் 8 வார்டுகள் வேண்டும் என காங்கிரஸ் கட்சியினர் கேட்டனர். ஆனால் இரண்டு வார்டுகள் மட்டுமே தர முடியும். அதுவும் நாங்கள் கொடுக்கும் வார்டுகளில் தான் போட்டியிட வேண்டும் என உள்ளூர் திமுக தரப்பில் கராராக தெரிவிக்கப்பட்டதாம். இதனால் அதிர்ச்சி அடைந்த காங்கிரஸ் கட்சியினர் மானாமதுரை நகராட்சியில் பல வார்டுகளில் தனித்து களமிறங்க முடிவு செய்துள்ளனர். இதற்கு காங்கிரஸ் கட்சியின் மாவட்ட தலைமையும் பச்சைக் கொடி காட்டி விட்டதாக அக் கட்சியினர் கூறுகின்றனர். இதையடுத்து காங்கிரஸ் கட்சியினர் மானாமதுரை நகராட்சியில் 3, 5, 6, 7, 8, 10,17, 19, 22 ஆகிய ஒன்பது வார்டுகளில் திமுக வேட்பாளர்களை எதிர்த்து தனியாக களம் இறங்குகின்றனர்.
இந்த நிலையில் காங்கிரஸ் கட்சியினர் அந்தந்த வார்டுகளில் உள்ள வாக்காளர்களை சந்தித்து பிரச்சாரத்தை தொடங்கியுள்ளனர். காங்கிரஸ் கட்சி சார்பில் அக்கட்சியின் மாநில சட்டப்பேரவை தொகுதி பொறுப்பாளர் ஏ.சி. சஞ்சய், இளைஞர் காங்கிரஸ் மாவட்ட இணைச் செயலாளர் புருஷோத்தமன், நகர் காங்கிரஸ் கமிட்டித் தலைவர் கணேசன் உள்ளிட்டோர் தங்களுக்கான வார்டுகளை தேர்வு செய்து வேட்பாளர்களாக களம் இறங்குகின்றனர்.
திமுக கூட்டணியில் வார்டுகள் ஒதுக்கீடு பேச்சு முழுமையடையாத நிலையில் மானாமதுரை நகராட்சியில் காங்கிரஸ் கட்சியினர் தனியாக களமிறங்க முடிவு செய்துள்ளது திமுக கூட்டணியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் திமுக கூட்டணியில் உள்ள பிற கட்சிகள் கேட்கும் வார்டுகளையும் ஒதுக்கீடு செய்ய வாய்ப்பில்லை என திமுக தரப்பில் கூறப்படுகிறது.