மானாமதுரை: செவித்திறன் குறைவு உடையோர் பள்ளியில் பாலியல் தொல்லை; போராட்டம்

மானாமதுரையில் செவித்திறன் குறைவுடையோர் பள்ளியில் பாலியல் தொல்லை கொடுப்பதாக புகார் கூறி மாற்றுத்திறனாளிகள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்த முயன்றனர்.
மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுக்கும் ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்க கோரி பள்ளியை முற்றுகையிட முயன்றவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்திய காவல் துறையினர்.
மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுக்கும் ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்க கோரி பள்ளியை முற்றுகையிட முயன்றவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்திய காவல் துறையினர்.

மானாமதுரை: சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் செவித்திறன் குறைவுடையோர் உயர்நிலைப்பள்ளியில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுப்பதாக புகார் கூறி பள்ளியை திங்கள்கிழமை பெண்கள் உள்ளிட்ட ஏராளமான காது கேளாதோர், வாய் பேச முடியாத மாற்றுத்திறனாளிகள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்த முயன்றனர்.

இவர்களை காவல் துறையினர் சமாதானம் செய்தனர். மானாமதுரையில் சிவகங்கை சாலையில் அரசு நிதி உதவி பெறும் சி.எஸ்.ஐ செவித்திறன் குறைவுடையோர் உயர்நிலைப்பள்ளி உள்ளது. இங்கு ஏராளமான காது கேளாத, வாய் பேச முடியாத மாணவ மாணவியர் படித்து வருகின்றனர். இங்குள்ள ஆசிரியர் ஒருவர் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்து வருவதாகவும், இது குறித்து வெளியில் கூறினால் தேர்வில் மதிப்பெண்களை குறைத்து விடுவேன் என மாணவிகளை மிரட்டுவதாகவும் சிவகங்கை மாவட்ட காது கேளாதோர்  நலச் சங்கத்தினர் புகார் தெரிவித்து வந்தனர். 

மேலும், மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுக்கும் ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி சிவகங்கை மாவட்ட நிர்வாகிகள் சில நாட்களுக்கு முன்பு சிவகங்கை மாவட்ட ஆட்சியர் மதுசூதன் ரெட்டியிடம் மனுக் கொடுத்தனர். ஆனால் புகார் மனு மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என காது கேளாதோர் நலச் சங்கத்தினர் தெரிவிக்கின்றனர். 

மேலும், மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலர் பள்ளி நிர்வாகத்திற்கு ஆதரவாக செயல்படுவதாகவும் புகார் தெரிவித்தனர். இந்நிலையில், மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுக்கும் ஆசிரியர் மீது பள்ளி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவர் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி பெண்கள் உள்ளிட்ட ஏராளமான காது கேளாதோர் மற்றும் வாய் பேச முடியாதோர் மானாமதுரையில்  சி.எஸ்.ஐ செவித்திறன் குறைவுடையோர் உயர்நிலைப் பள்ளியை முற்றுகையிட்டு போராட்டம் நடத்துவதற்காக காந்தி சிலை முன்பு கூடினர். 

அப்போது தகவல் அறிந்து அங்கு வந்த மானாமதுரை காவல் துறை ஆய்வாளர் முத்துகணேஷ்,  துணை ஆய்வாளர் முருகானந்தம் உள்ளிட்ட காவல் துறையினர் இவர்களை தடுத்து நிறுத்தி பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாததால், இவர்கள் பள்ளியை முற்றுகையிட புறப்பட்டனர்.

ஆனால் காவல் துறையினர் இவர்களை தடுத்து நிறுத்தினர். சம்பவ இடத்திற்கு மாவட்ட மாற்றுத்திறனாளிகள் அலுவலர் மற்றும் வட்டாட்சியர், மானாமதுரை காவல் டிஎஸ்பி கண்ணன் உள்ளிட்டோர் வந்து போராட்டக்காரர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து முற்றுகை போராட்டம் நடத்தும் முடிவை கைவிட்டு காதுகேளாதோர் பேச்சுவார்த்தைக்கு சம்மதித்தனர்.

 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com