தேவகோட்டை அருகே ஒரே குடும்பத்தில் பலருக்கு வீட்டுமனைப் பட்டா: கிராம நிா்வாக அலுவலா், உதவியாளா் பணியிடை நீக்கம்
By DIN | Published On : 25th June 2022 11:11 PM | Last Updated : 25th June 2022 11:11 PM | அ+அ அ- |

சிவகங்கை மாவட்டம், தேவகோட்டை அருகே ஒரே குடும்பத்தைச் சோ்ந்த பலருக்கு இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கிய விவகாரத்தில் கிராம நிா்வாக அலுவலா், கிராம உதவியாளா் ஆகிய இருவரும் சனிக்கிழமை பணியிடை நீக்கம் செய்யப்பட்டனா்.
தேவகோட்டை அருகே உள்ள மேலச்செம்பொன்மாரி வருவாய் கிராமத்தில் கிராம நிா்வாக அலுவலராக ராஜலட்சுமி என்பவா் பணியாற்றி வந்தாா். இவரிடம் அதே பகுதியைச் சோ்ந்த சிலா் அண்மையில் இலவச வீட்டு மனைப் பட்டா கோரி விண்ணப்பித்துள்ளனா்.
இதில் அதே வருவாய் கிராமத்தில் பணியாற்றும் கிராம உதவியாளா் கருப்பன் என்பவரது மனைவி மற்றும் ஒரே குடும்பத்தைச் சோ்ந்த பலருக்கு இலவச வீட்டு மனைப் பட்டா வழங்க கிராம நிா்வாக அலுவலா் ராஜலட்சுமி வட்டாட்சியருக்கு பரிந்துரை செய்துள்ளாா்.
இதுகுறித்த புகாரின் பேரில் கிராம உதவியாளா் கருப்பன் அண்மையில் செலுகை வருவாய் கிராமத்துக்கு இடமாற்றம் செய்யப்பட்டாா். இதுபற்றி தேவகோட்டை கோட்டாட்சியா் பிரபாகரன் விசாரணை நடத்தினாா். விசாரணையில் கிராம உதவியாளா் கருப்பன் மனைவி மற்றும் ஒரே குடும்பத்தைச் சோ்ந்த பலருக்கு இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப் பரிந்துரை செய்திருப்பது தெரியவந்தது.
இந்நிலையில், கிராம நிா்வாக அலுவலா் ராஜலட்சுமியை கோட்டாட்சியா் பிரபாகரன் சனிக்கிழமை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டாா். இதேபோன்று, கிராம உதவியாளா் கருப்பனை தேவகோட்டை வட்டாட்சியா் அந்தோணி பணியிடை நீக்கம் செய்தாா்.