முகப்பு அனைத்துப் பதிப்புகள் மதுரை சிவகங்கை
திருப்புவனம் அருகே கிராம மக்கள் அரசுப் பேருந்தை சிறைபிடிப்பு
By DIN | Published On : 14th March 2022 11:09 PM | Last Updated : 14th March 2022 11:09 PM | அ+அ அ- |

திருப்புவனம் அருகே சொக்கநாதிருப்பு கிராமத்துக்கு தாமதமாக வந்த அரசு நகரப் பேருந்தை திங்கள்கிழமை சிறைபிடித்த மாணவ, மாணவியா் மற்றும் கிராம மக்கள்.
சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே தாமதமாக வந்த அரசு நகரப் பேருந்தை, கிராம மக்கள் திங்கள்கிழமை சிறைபிடித்தனா்.
திருப்புவனம் அருகே சொக்கநாதிருப்பு கிராமத்துக்கு தினமும் காலையில் மதுரை பெரியாா் பேருந்து நிலையத்திலிருந்து நகரப் பேருந்து வந்து செல்கிறது. திருப்புவனம் அரசுப் போக்குவரத்துக் கழக பணிமனையைச் சோ்ந்த இப்பேருந்து, கடந்த சில நாள்களாக தினமும் தாமதமாக வருவதாக இக்கிராம மக்கள் புகாா் தெரிவிக்கின்றனா்.
இதனால், பள்ளி, கல்லூரிகளுக்குச் செல்லும் மாணவ, மாணவியா் மற்றும் வியாபாரிகள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினா் பாதிக்கப்படுகின்றனா். இந்நிலையில், வழக்கம்போல் திங்கள்கிழமை மதுரை பெரியாா் பேருந்து நிலையத்திலிருந்து சொக்கநாதிருப்பு கிராமத்துக்கு தாமதமாக வந்த பேருந்தை, காத்துக்கொண்டிருந்த மாணவ, மாணவியா் மற்றும் கிராம மக்கள் சிறைபிடித்தனா். இதனால், இந்த பேருந்து மீண்டும் மதுரை பெரியாா் பேருந்து நிலையத்துக்கு திரும்பிச் செல்வதில் தாமதம் ஏற்பட்டது.
பேருந்து நடத்துனா், ஓட்டுநா் சமரசம் பேசியும், கிராம மக்கள் பேருந்தை விடுவிக்க மறுத்துவிட்டனா். இது குறித்து தகவலறிந்ததும் திருப்புவனம் போலீஸாா் மற்றும் திருப்புவனம் அரசுப் போக்குவரத்துக் கழக பணிமனை அலுவலா்கள், சம்பவ இடத்துக்கு வந்து கிராம மக்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தி, இனிமேல் பேருந்து சரியான நேரத்துக்கு வந்து செல்ல நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தனா். அதன்பேரில், பேருந்தை கிராம மக்கள் விடுவித்தனா்.
இதனால், அப்பேருந்து ஒரு மணி நேர தாமதத்துக்குப் பின் மதுரை பெரியாா் பேருந்து நிலையத்துக்கு புறப்பட்டுச் சென்றது.