மானாமதுரை சித்திரைத் திருவிழாவுக்காக வைகையாறு சுத்தம் செய்யும் பணி தொடக்கம்
By DIN | Published On : 16th March 2022 03:18 PM | Last Updated : 16th March 2022 03:18 PM | அ+அ அ- |

மானாமதுரையில் சித்திரைத் திருவிழாவுக்காக வைகை ஆற்றை சுத்தம் செய்யும் பணி தொடக்க நிகழ்வில் சிவகங்கை மாவட்ட ஆட்சியர் மதுசூதன்ரெட்டி நகராட்சித் தலைவர் மாரியப்பன் கென்னடி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
மானாமதுரை: சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் சித்திரைத் திருவிழா தொடங்க உள்ளதை முன்னிட்டு வைகை ஆற்றை சுத்தம் செய்யும் பணி புதன்கிழமை தொடங்கி வைக்கப்பட்டது.
மானாமதுரையில் சித்திரைத் திருவிழா மிகவும் பிரசித்தம் பெற்றதாகும். இங்குள்ள ஆனந்தவல்லி சமேத சோமநாதர் சுவாமி கோயில், வீர அழகர் கோயிலில் சித்திரைத் திருவிழா தொடர்ந்து 20 நாட்கள் நடைபெறும். வைகை ஆற்றை மையமாக வைத்து நடைபெறும் இந்த திருவிழாக்களில் திருவிழாவிற்கான கலைநிகழ்ச்சிகள், பொழுதுபோக்கு அம்சங்களான ராட்டினங்கள், திருவிழாக் கடைகள் போன்றவை ஆற்றுக்குள் அமைக்கப்படும்.
சித்திரைத் திருவிழாவின் முத்திரை பதிக்கும் நிகழ்வாக ஆற்றில் அழகர் இறங்கும் வைபவம் ஆற்றுக்குள் நடைபெறும். கரோனா தொற்றுப் பரவல் காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக மானாமதுரையில் சித்திரைத் திருவிழா நடைபெறவில்லை. இந்த ஆண்டு விரைவில் மானாமதுரையில் தொடங்கவுள்ள சித்திரைத் திருவிழாவை மிகவும் சிறப்பாக நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
இதையடுத்து சித்திரைத் திருவிழாவிற்காக மானாமதுரை நகர்ப் பகுதி வைகை ஆற்றை நகராட்சி நிர்வாகம் மூலம் சுத்தம் செய்யும் பணி தொடங்கி வைக்கப்பட்டது. மாவட்ட ஆட்சியர் மதுசூதன் ரெட்டி தலைமையில் நடைபெற்ற இதற்கான நிகழ்வில் நகராட்சித் தலைவர் எஸ்.மாரியப்பன் கென்னடி, துணைத் தலைவர் பாலசுந்தரம், ஊராட்சி ஒன்றியத் தலைவர் லதா, துணைத் தலைவர் முத்துசாமி, நகராட்சி ஆணையர் கண்ணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.