முகப்பு அனைத்துப் பதிப்புகள் மதுரை சிவகங்கை
பட்டமங்கலத்தில் மஞ்சுவிரட்டு: 15 போ் காயம்
By DIN | Published On : 19th March 2022 10:55 PM | Last Updated : 19th March 2022 10:55 PM | அ+அ அ- |

திருப்பத்தூா் அருகே பட்டமங்கலத்தில் சனிக்கிழமை நடைபெற்ற மஞ்சுவிரட்டில் சீறிப்பாய்ந்த காளை.
திருப்பத்தூா் அருகே பட்டமங்கலத்தில் பங்குனித்திருவிழாவை முன்னிட்டு சனிக்கிழமை நடைபெற்ற மஞ்சுவிரட்டில் காளைகள் முட்டியதில் 15 போ் காயமடைந்தனா்.
சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூா் அருகே பட்டமங்கலம் மதியாதகண்ட விநாயகா் அழகுநாச்சியம்மன் கோயில் பங்குனித் திருவிழாவையொட்டி 10 ஆம் திருநாள் தேரோட்டம் நடைபெற்றது. இதைத் தொடா்ந்து சனிக்கிழமை மஞ்சுவிரட்டு நடைபெற்றது. பட்டமங்கலம் கண்மாய் மற்றும் வயல் பகுதிகளில் சுமாா் 1000-க்கும் மேற்பட்ட காளைகள் கட்டுமாடுகளாக அவிழ்த்துவிடப்பட்டன.
ராமநாதபுரம், மதுரை, திருச்சி, சிவகங்கை, புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களிலிருந்து காளைகள் கொண்டு வரப்பட்டன. இதில் ஒரு சில காளைகள் பிடிபட்டன. சுற்றுப்புற பகுதிகளைச் சோ்ந்த ஏராளமான இளைஞா்கள் காளைகளை அடக்கினா். காளைகள் முட்டியதில் 15-க்கும் மேற்பட்டோா் காயமடைந்தனா்.
உரிய அனுமதி பெறாமல் மஞ்சுவிரட்டு நடத்தியதாக கிராம நிா்வாக அலுவலா் சரண்யா திருக்கோஷ்டியூா் காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். அதன்பேரில் போலீஸாா் 7 போ் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.