இளையான்குடியில் வெறிநாய் கடித்து சிறுவர்கள் உள்பட 10 பேர் காயம் 

சிவகங்கை மாவட்டம் இளையான்குடியில் வெறிநாய் கடித்து சிறுவர்கள் உள்பட 10 பேர் காயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். 
கோப்புப்படம்
கோப்புப்படம்

மானாமதுரை: சிவகங்கை மாவட்டம் இளையான்குடியில் வெறிநாய் கடித்து சிறுவர்கள் உள்பட 10 பேர் காயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். 

இளையான்குடி நகர்ப் பகுதியில் ஏற்கனவே வெறிநாய் தொல்லை இருந்து வருவதாகவும், இந்த நாய்களை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியும் மனிதநேய ஜனநாயக கட்சி உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் பேரூராட்சி நிர்வாகத்தை வலியுறுத்தி வந்தன. ஆனால் நடவடிக்கை எடுக்கப்படாத நிலையில் இளையான்குடியில் தொடர்ந்து வெறிநாய் தொல்லை அதிகரித்து வருகிறது. 

இந்நிலையில் இளையான்குடி சம்சுதீன் தெருவில் வெள்ளிக்கிழமை வெறிநாய் ஒன்று சாலையில் நடந்து சென்றவர்களையும், இருசக்கர வாகனத்தில் சென்றவர்களையும்,  வீதிகளில் விளையாடிக் கொண்டிருந்த சிறுவர்களையும் விரட்டி கடித்தது. 

இச்சம்பவத்தில் சிறுவர்கள் உள்பட 10 பேர் காயமடைந்தனர். இவர்கள் உடனடியாக இளையான்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். இச்சம்பவம் குறித்து உடனடியாக பேரூராட்சி நிர்வாகத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனடியாக பேரூராட்சி நிர்வாகத்தினர் இளையான்குடி பகுதியில் பொதுமக்களை கடித்த வெறிநாயை பிடிக்க நடவடிக்கை மேற்கொண்டனர். 

இதுகுறித்து மனிதநேய ஜனநாயக கட்சி மாநில துணைச் செயலாளர் சைபுல்லாக்  கூறுகையில், "இளையான்குடி பகுதியில் தொடர்ந்து வெறிநாய் தொல்லை அதிகரித்து வருகிறது. வெறி நாய்களை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என இளையான்குடி பேரூராட்சி நிர்வாகத்திற்கு தொடர்ந்து கோரிக்கை வைத்து வருகிறோம். ஆனால் பேரூராட்சி நிர்வாகத்தினர் எங்கள் கோரிக்கையை கண்டு கொள்வது கிடையாது. வெறிநாய் தொல்லையால் இளையான்குடி வீதிகளில் பொதுமக்கள் நடந்து செல்லவவும் வீதிகளில் சிறுவர்கள், குழந்தைகள் விளையாடவும் அச்சப்படுகின்றனர். எனவே பேரூராட்சி நிர்வாகம் இளையான்குடி பேரூராட்சி பகுதியில் வெறி நாய்களை ஒழிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com