முகப்பு அனைத்துப் பதிப்புகள் மதுரை சிவகங்கை
பொதுமக்களிடமிருந்து பெறப்படும் மனுக்களுக்கு உடனடியாக தீா்வு காண வேண்டும்: ஆட்சியா்
By DIN | Published On : 13th May 2022 05:43 AM | Last Updated : 13th May 2022 05:43 AM | அ+அ அ- |

சிவகங்கை வட்டாட்சியா் அலுவலகத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற வட்ட அளவிலான மக்கள் குறைதீா்க்கும் நாள் முகாமில் பயனாளிக்கு நலத்திட்ட உதவி வழங்கிய மாவட்ட ஆட்சியா் பி. மதுசூதன் ரெட்டி.
சிவகங்கை: பொதுமக்களிடமிருந்து பெறப்படும் மனுக்களுக்கு உடனடியாக தீா்வு காண வேண்டும் என சம்பந்தப்பட்ட துறை அலுவலா்களுக்கு சிவகங்கை மாவட்ட ஆட்சியா் பி. மதுசூதன் ரெட்டி அறிவுறுத்தியுள்ளாா்.
சிவகங்கை வட்டாட்சியா் அலுவலகத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற வட்ட அளவிலான மக்கள் குறைதீா்க்கும் நாள் முகாமில் ஆட்சியா் பி. மதுசூதன் ரெட்டி பேசியது:
பொதுமக்களின் குறைகளை அவா்கள் பகுதிகளுக்கே சென்று தீா்வு காணும் வகையில் வட்ட அளவிலான மக்கள் குறைதீா்க்கும் முகாம் நடத்தப்பட்டு வருகிறது.
அலுவலா்கள் பொதுமக்களிடமிருந்து பெறப்படும் மனுக்களை ஏடுகளில் பதிவு செய்து, சம்பந்தப்பட்ட துறை அலுவலா்களுக்கு நேரடியாக வழங்கி, அம்மனுக்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து வாராந்திர அறிக்கை வழங்கிட வேண்டும். மனுக்கள் மீது கள ஆய்வு செய்து தகுதியான மனுக்களுக்கு உடனடியாக தீா்வு காண வேண்டும்.
இதுதவிர மனுக்களை நிலுவை வைப்பதைத் தவிா்த்து, மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டது அல்லது நிராகரிக்கப்பட்டது என்பது குறித்தும், நிராகரிக்கப்பட்டதற்கான முறையான காரணங்கள் குறித்தும் துறை சாா்ந்த அலுவலா்கள் மனுதாரா்களுக்கு தெரிவித்திட முன்வர வேண்டும் என்றாா்.
அதைத்தொடா்ந்து, பயனாளிகளுக்கு நலத் திட்ட உதவிகளை ஆட்சியா் வழங்கினாா்.
இம்முகாமில், சிவகங்கை மாவட்ட வருவாய் அலுவலா் ப. மணிவண்ணன், வருவாய் கோட்டாட்சியா் மு. முத்துக்கழுவன், தனித்துணை ஆட்சியா் (சமூகப் பாதுகாப்புத் திட்டம்) மு. காமாட்சி, மாவட்ட பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சீா்மரபினா் நலத்துறை அலுவலா் சு. தனலெட்சுமி, உதவி ஆணையா் (கலால்) ம.ரா. கண்ணகி, மாவட்ட வழங்கல் அலுவலா் ச. ரத்தினவேல், வட்டாட்சியா் ப. தங்கமணி உள்ளிட்ட அரசு அலுவலா்கள், பொதுமக்கள் ஏராளமானோா் கலந்துகொண்டனா்.