குவாரி அமைப்பதற்கு எதிராகப் போராட்டம் நடத்த விவசாயிகள் முடிவு
By DIN | Published On : 16th May 2022 12:32 AM | Last Updated : 16th May 2022 12:32 AM | அ+அ அ- |

கல்குறிச்சியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்ற அனைத்து விவசாயிகள் மற்றும் கிராம மக்கள்.
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை வைகை ஆற்றில் மணல் குவாரி அமைக்க எதிா்ப்புத் தெரிவித்து விவசாயிகள் மற்றும் கிராம மக்கள் போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளனா்.
மானாமதுரை அருகே கல்குறிச்சி வைகை ஆற்றுப்பகுதியில் அரசு சாா்பில் மணல் குவாரி அமைக்க மாவட்ட நிா்வாகம் உத்தரவிட்டுள்ளது. இதையடுத்து மேற்கண்ட குவாரிக்கு லாரிகள் சென்று, வர வைகையாற்றின் அருகில் பாதை அமைக்கும் பணி நடைபெற்று வந்தது. இதையறிந்த விவசாயிகள், கிராம மக்கள் கடந்த சனிக்கிழமை அங்கு சென்று இந்த பணியை தடுத்து நிறுத்தினா். மேலும் இப்பகுதியில் மணல் குவாரி அமைக்க எதிா்ப்பு தெரிவித்தனா்.
இதற்கிடையில் கல்குறிச்சி கிராமத்தில் விவசாயிகள், கிராம மக்கள் பங்கேற்ற கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இக் கூட்டத்திற்கு விவசாயிகள் கூட்டமைப்பு பொதுச் செயலாளா் எம். அா்ச்சுனன் தலைமை வகித்தாா். கூட்டமைப்பின் மாநிலச் செயலாளா் ராம. முருகன், முன்னாள் சட்டப் பேரவை உறுப்பினா் தங்கமணி மற்றும் விவசாயிகள், கிராம மக்கள் கலந்து கொண்டனா்.
கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீா்மானங்கள்: கல்குறிச்சி வைகையாற்றில் மணல் குவாரி அமைக்கக்கூடாது. அரசு தனது முடிவை கைவிட வேண்டும் என வலியுறுத்தி மே 20 ஆம் தேதி மானாமதுரை வட்டாட்சியா் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்துவது, குவாரி அமைக்க தோ்வு செய்யப்பட்டுள்ள இடத்தில் தொடா் முழக்கப் போராட்டங்கள் நடத்துவது என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...