மானாமதுரை: வைகை ஆற்றில் மணல் குவாரி அமைக்க எதிர்ப்பு

மானாமதுரை வைகை ஆற்றில் மணல் குவாரி அமைக்க எதிர்ப்பு  தெரிவித்து சமாதானக் கூட்டத்தில் அரசியல் கட்சியினர், விவசாயிகள் ஆவேசமாக பேசியதால் பரபரப்பு ஏற்பட்டது.
மானாமதுரை: வைகை ஆற்றில் மணல் குவாரி அமைக்க எதிர்ப்பு

மானாமதுரை: மானாமதுரை வைகை ஆற்றில் மணல் குவாரி அமைக்க எதிர்ப்பு  தெரிவித்து சமாதானக் கூட்டத்தில் அரசியல் கட்சியினர், விவசாயிகள் ஆவேசமாக பேசியதால் பரபரப்பு ஏற்பட்டது.

சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் வைகை ஆற்றில் மணல் குவாரி அமைக்கும் அரசின் முடிவுக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ள நிலையில் போராட்டம் அறிவிக்கப்பட்டதால் வியாழக்கிழமை நடத்தப்பட்ட சமாதான கூட்டத்தில் அரசியல் கட்சியினர், விவசாயிகள் மணல் குவாரிக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆவேசமாக பேசியதால் பரபரப்பு ஏற்பட்டது.

இக்கூட்டத்தில் எந்தவித முடிவும் எட்டப்படாததால் அனைத்து தரப்பினரும் சேர்ந்து சாலை மறியல் போராட்டத்தை அறிவித்துள்ளனர்.

மானாமதுரை ஒன்றியம் கல்குறிச்சி பகுதி வைகை ஆற்றில் மணல் குவாரி அமைக்க மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.  இந்த குவாரி அமைக்கப்பட்டால் மதுரை மாவட்டம் விரகனூர் மதகு அணையிலிருந்து ராமநாதபுரம் மாவட்டம் பார்த்திபனூர் மதகு அணை வரை வைகை ஆற்றுக்குள் செயல்பட்டு வரும் ஏராளமான குடிநீர் திட்டங்கள் பாதிக்கப்பட்டு குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாய நிலை உருவாகும். 

மேலும் வைகை ஆற்றை ஒட்டியுள்ள விவசாய பாசனக் கிணறுகள் வறண்டு விடும். எனவே மணல் குவாரி அமைப்பதற்கு மானாமதுரை பகுதியில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. ஏற்கனவே கல்குறிச்சி வைகை பகுதியில் வனத்துறைக்கு சொந்தமான நிலங்களில் மரங்களை அழித்து குவாரிக்கு சென்று மணல் ஏற்றி வர லாரிகள் செல்வதற்கு பாதை அமைக்கும் பணி தடுத்து நிறுத்தப்பட்டது. 

இதைத் தொடர்ந்து விவசாயிகள் கூட்டமைப்பு சார்பில் மே 20 ஆம் தேதி மானாமதுரை வட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. போராட்டத்தை கைவிட செய்யும் நோக்கத்தில் மானாமதுரை  வட்டாட்சியர் அலுவலகத்தில் சமாதானக் கூட்டம் நடைபெற்றது.
 
இக்கூட்டத்தில் மானாமதுரை வட்டாட்சியர் தமிழரசன், கனிம வளத்துறை அதிகாரிகள் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் அதிமுகவைச் சேர்ந்த முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் எஸ்.குணசேகரன், எம்.குணசேகரன், கே.தங்கமணி, சிவகங்கை முன்னாள் நகர் மன்றத் தலைவர் எம்.அர்ச்சுனன் உள்பட அனைத்து அரசியல் கட்சியினர், விவசாயிகள் மற்றும் விவசாயிகள் சங்கத்தை சேர்ந்தவர்கள் என ஏராளமானோர் சமாதான கூட்டத்தில் கலந்துகொண்டனர். 

இக்கூட்டத்தில் பங்கேற்ற விவசாயிகள், அரசியல் கட்சியினர் குடிநீர் திட்டங்களுக்கு பாதிப்பு ஏற்படும் வகையில் மானாமதுரை பகுதியில் மணல் குவாரி அமைக்கக்கூடாது. இதற்கான உத்தரவை மாவட்ட நிர்வாகம் உடனடியாக ரத்து செய்ய வேண்டும். உயிரைக் கொடுத்தாவது மணல் குவாரி அமைப்பததை தடுத்து நிறுத்துவோம் என ஆவேசமாகப் பேசினர். 

இதனால் கூட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது. அதைத்தொடர்ந்து மானாமதுரை வட்டாட்சியர் தமிழரசன் பேசுகையில் கூட்டத்தில் பங்கேற்றறு பேசியவர்களின் கருத்துக்கள் அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லப்படும். அதுவரை போராட்டத்தை ஒத்திவைக்க வேண்டும். என்றார். கூட்டத்தில் அரசு தரப்பிலிருந்து மணல் குவாரியை ரத்து செய்வதற்கு எந்த விதமான உத்தரவாதமும் அளிக்கப்படாத நிலையில் போராட்டத்தை ஒத்தி வைக்க முடியாது. நடத்தியே தீருவோம் என கூறி சமாதானக் கூட்டத்தில் பங்கேற்ற விவசாயிகள், அரசியல் கட்சியினர் கூட்டம் நடந்த அறையை விட்டு வெளியேறினர். 

அதன்பின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் எம்.குணசேகரன், சிவகங்கை முன்னாள் நகர் மன்றத் தலைவர் எம்.அர்ச்சுனன் ஆகியோர் செய்தியாளர்களிடம் கூறும்போது மணல் குவாரிக்கு எதிராக அறிவிக்கப்பட்டிருந்த வட்டாட்சியர் அலுவலகம் முற்றுகை போராட்டம் கைவிடப்பட்டு அனைத்து அரசியல் கட்சியினர்,  அனைத்து விவசாயிகள் மற்றும் பல்வேறு கிராம மக்களைத் திரட்டி மானாமதுரை கல்குறிச்சி வைகை ஆற்றுப்பகுதியில் மணல் குவாரி அமைக்கக்கூடாது.

அதற்கான அரசு உத்தரவை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் 24 ஆம் தேதி (செவ்வாய்க்கிழமை) மானாமதுரையில் மதுரை-ராமேஸ்வரம் நான்கு வழி சாலையில் பெரிய அளவில் சாலை மறியல் போராட்டம் நடத்துவது என முடிவு செய்துள்ளோம் என்றனர். 
மானாமதுரை பகுதியில் குடிநீர் ஆதாரங்களை பாதிக்கும் வகையில் அரசு அமைக்க திட்டமிட்டுள்ள மணல் குவாரிக்கு மானாமதுரை சட்டமன்றத் தொகுதி முழுவதும் கடுமையான எதிர்ப்பு கிளம்பியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com